கடும் போக்கு வேண்டாம்… ட்ரம்பிடம் கெஞ்சத் தொடங்கிய மத்திய கிழக்கு நாடு ஒன்று
கடந்த ஆட்சி போன்று கடும் போக்கு வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்புக்கு ஈரான் கோரிக்கை வைத்துள்ளது.
தவறான கொள்கை
கடந்த ஆட்சியின் போது தவறான கொள்கைகளை பின்பற்றுவதை டொனால்டு ட்ரம்ப் கைவிட வேண்டும் என ஈரான் தரப்பில் இருந்து Mohammad Javad Zarif என்பவர் கோரிக்கை வைத்துள்ளார்.
திட்டமிடல் விவகாரங்களுக்கான ஈரானிய துணைத் தலைவரான இவர், ஈரானின் வெளிவிவகார அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மட்டுமின்றி, அமெரிக்கா உட்பட மேற்கத்திய வல்லரசுகளுடன் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றை 2015ல் முன்னெடுக்கவும் உதவியுள்ளார்.
ஆனால், 2018ல் ட்ரம்ப் ஆட்சியின் போது அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து அதிரடியாக வெளியேறியது. அத்துடன் ஈரான் மீது தடைகளையும் விதித்தது. இதற்கு பதிலடியாக இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது கடமைகளைத் திரும்பப் பெற்றது மற்றும் யுரேனியத்தை 60 சதவீதம் வரை செறிவூட்டியது.
மட்டுமின்றி, அணு ஆயுத தயாரிப்பை ஈரான் முன்னெடுத்து வருவதாக மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டுகளையும் புறந்தள்ளியது. மேலும், ஈரான் மீதான ட்ரம்பின் அரசியல் அணுகுமுறை தான் யுரேனியன் செறிவூட்டல் திட்டங்களில் வளர்ச்சிக்கு வழிவகுத்தது என்றும் Zarif குறிப்பிட்டுள்ளார்.
ஈரானை பாதிப்புக்குள்ளாக்கும்
3.5 சதவிகிதம் இருந்த செறிவூட்டல் நிலை தற்போது 60 சதவிகிதம் என அதிகரித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார். ட்ரம்பின் கடந்த ஆட்சி காலத்தில் ஈரானிய தளபதிகள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
மிக முக்கிய தளபதிகளில் ஒருவரான Qasem Soleimani ஈராக்கிய தலைநகர் பாக்தாதில் வைத்து 2020 ஜனவரி மாதம் ட்ரோன் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார்.
இதனிடையே, ஈரானின் வெளிவிவகார அமைச்சக செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாய் தெரிவிக்கையில், கடந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட தவறான அணுகுமுறைகளை திருத்த ட்ரம்ப் தயாராக வேண்டும் என்றார்.
இதே வேளை பத்திரிகையாளர்களிடம் ட்ரம்ப் தெரிவிக்கையில், ஈரானை பாதிப்புக்குள்ளாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில்லை என்றார்.
மேலும் தெரிவிக்கையில், எனது விதிமுறைகள் மிகவும் எளிதானவை. அவர்கள் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது. அவர்கள் மிகவும் வெற்றிகரமான நாடாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.