;
Athirady Tamil News

சுன்னாகம் விபத்து – விசாரணைகளை ஆரம்பித்துள்ள விசேட பொலிஸ் குழு

0

சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தினை தொடர்ந்து பொலிஸார் நடந்து கொண்ட விடயம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜருள் தெரிவித்துள்ளார்.

சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் சனிக்கிழமை வான் – மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து வாகன சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தினை சிவில் உடையில் நின்ற பொலிஸார் பரிசோதிக்க முற்பட்ட வேளை சாரதிக்கு பொலிஸாருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது

அதனை தடுக்க சென்ற சாரதியின் மனைவியையும் பொலிஸார் தாக்கியதாகவும் , அவரின் கையில் இருந்த அவர்களின் இரண்டு மாத குழந்தையை பொலிஸார் தட்டி விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்தினை அடுத்து நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் கூடியமையால் பதட்டமான சூழ்நிலை காணப்பட்டது.

அந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம் எஸ் எம் ஜருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் , பயணித்த மோட்டார் சைக்கிளிலும் வான் ஒன்றும் காங்கேசன்துறையில் வீதியில் சுன்னாகம் சந்திக்கு அருகில் விபத்துக்கு உள்ளானது.

விபத்தினை அடுத்து , வாகனம் அவ்விடத்தில் இருந்து தப்பி செல்ல முற்பட்ட வேளை , சிவில் உடையில் நின்ற பொலிஸார் வாகனத்தை வழிமறித்து , சாரதியின் சாரதி அனுமதி பத்திரத்தினை கேட்டுள்ளனர்.

சிவில் உடையில் உள்ளவர்களுக்கு தான் சாரதி அனுமதி பத்திரத்தினை தர மாட்டேன் என கூறி தர்க்கப்பட்ட நிலையில் இரு தரப்பினரும் கைக்கலப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தரும் , கைகலப்பில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரும் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க அவர்களின் உத்தரவில் , விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளில் குற்றவியல் குற்றங்கள் கண்டறியப்பட்டால் , அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை பொலிசாரின் நடவடிக்கைகள் குறித்து ஒழுக்காற்று நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

பொலிஸார் பொதுமக்களின் பாதுகாப்புக்காகவே கடமையில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு என ஒரு வரையறை இருக்கின்றன. அவற்றினை அவர்கள் மீற முடியாது. மீறினால் நிச்சயமாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

சுன்னாகத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசேட குழுவினரால் பக்க சார்பற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபரும் அறிவுறுத்தியுள்ளார். நிச்சயமா பக்க சார்பற்ற விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.