பொதுமக்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை
சுகாதார அமைச்சின் (Ministry of Health) சிரேஷ்ட அதிகாரிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, சுகாதார ஊழியர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்றின் வழக்குகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
மோசடி குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார அமைச்சின் எந்தவொரு அதிகாரியும் தொலைபேசி, வாட்ஸ்அப் அல்லது வேறு எந்த ஊடகத்தையும் பயன்படுத்தி அத்தகைய பணத்தை சேகரிக்கும் அல்லது கோரும் செயலில் ஈடுபடக்கூடாது என்று அமைச்சு அறிவித்துள்ளது.
பண மோசடி
இவ்வாறான மோசடி செய்பவர்களுக்கு பலியாகாமல் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிடவோ அல்லது வேறு வழிகளில் பணம் அனுப்பவோ வேண்டாம் என சுகாதார அமைச்சு மக்களுக்கு அறிவித்துள்ளது.
அத்துடன், மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளுக்கு தெரிவிப்பதுடன் அந்த மோசடியாளர்களை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் பொதுமக்களிடம் வலியுறுத்தியுள்ளது.
இந்த மோசடியை எதிர்ப்பதற்கும், இதுபோன்ற ஏமாற்றங்களிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும் ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.