ஏர் இந்தியாவுடன் இணைப்பு.. கடைசி விஸ்தாரா விமானங்களின் புறப்பாடு!
ஏா் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா விமான நிறுவனத்தை இணைக்கும் பணி நிறைவு பெற்றிருக்கும் நிலையில் விஸ்தாரா நிறுவனத்தின் கடைசி விமானங்கள் இன்று தங்களது பயணத்தை நிறைவு செய்துகொள்கின்றன.
விஸ்தாரா நிறுவனத்தின் உள்நாட்டு கடைசி விமானம் மும்பை – தில்லி இடையே இன்று இரவு 10.50 மணிக்கு புறப்படுகிறது. சர்வதேச விமானம் சிங்கப்பூரிலிருந்து தில்லிக்கு இன்று இரவு 11.45 மணிக்குப் புறப்படுகிறது.
இதுதான், ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படுவதற்கு முன்பு, விஸ்தாரா நிறுவனத்தின் பெயரில் இயக்கப்படும் கடைசி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்கள் ஆகும்.
இது குறித்து விஸ்தாரா நிறுவன அதிகாரிகள் கூறுகையில், எங்களுக்கு ஒரு கலவையான உணர்வு நிலவுகிறது. விஸ்தாரா நிறுவனத்தில் பணியாற்றும் தாங்கள் ஏர் இந்தியாவுடன் இணைவது குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவே உள்ளோம், ஆனால் எங்கள் அடையாளம் விஸ்தாரா தானே என்பதால், எங்களின் பெருமையாக எப்போதும் விஸ்தாரா விளங்கும் என்கிறார்கள்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி முதல் விஸ்தாரா நிறுவனம் தனது விமான சேவையைத் தொடங்கியது. அது முதல் ஏராளமான இந்தியர்களின் ஆதரவை பெற்றிருந்தது. ப்ரீமியம் எகானமி என்ற முறையை முதன் முதலில் அறிமுகப்படுத்திய உள்நாட்டு விமான சேவை நிறுவனம் விஸ்தாரா என்ற பெருமையையும் பெற்றிருந்தது.
விஸ்தாரா நிறுவனம் செவ்வாய்க்கிழமை முதல் ஏர் இந்தியா நிறுவனத்தின் பெயரில் இயங்கும் என்றாலும், எங்கள் பயணிகளுக்கு எவ்வித அசௌகரியமும் நேரிடமல் சேவை வழங்கப்படும் என்றும் நிறுவனம் சார்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
விஸ்தாரா நிறுவன விமானங்களும், அதன் பயணிகளும் ஏர் இந்தியாவுடன் நவம்பர் 12 முதல் சுமூகமாக இணைவதற்கான அனைத்து அடிப்படைக் காரணிகளையும் செய்திருப்பதா ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
விஸ்தாராவில் டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு 51 சதவீத பங்கும், சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு 49 சதவீத பங்கும் இருந்த நிலையில், டாடா குழுமத்தின் ஏா் இந்தியாவுடன் விஸ்தாராவை இணைக்க முடிவு செய்யப்பட்டது.
இதுதொடா்பான ஒப்பந்தம் 2024-ஆம் ஆண்டு முதல் காலாண்டில் நிறைவேற்றப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வந்தன.
இணைப்புப் பணிகள் நிறைவு பெற்று நாளை முதல் விஸ்தாரா ஏர் இந்தியாவில் இணையும் இந்த இணைப்பின் மூலம் 218 விமானங்களுடன் நாட்டின் பெரிய சா்வதேச விமான நிறுவனம், இரண்டாவது பெரிய உள்நாட்டு விமான நிறுவனம் ஆகிய பெருமைகளை ஏா் இந்தியா பெறும் என்று டாடா குழுமம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.