மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கி சூடு: விவசாயி காயம்
மணிப்பூரில் வயலில் பணிபுரிந்துகொண்டிருந்த விவசாயி மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் காயமடைந்தார்.
மணிப்பூர் மாநிலம், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள வயலில் பணிபுரிந்துகொண்டிருந்த விவசாயி ஒருவர் மீது திங்கள்கிழமை காலை அருகிலுள்ள மலை உச்சியில் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அவர் காயமடைந்தார். பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பதில் தாக்குதல் நடத்தினர்.
இதனால் அங்கு இருத்தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.
காயமடைந்த விவசாயி யைங்காங்போக்பி சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும் அவர் தற்போது ஆபத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கில் வயல்களில் பணிபுரியும் விவசாயிகள் மீது தொடர்ந்து மூன்றாவது நாளாக மலைப்பாங்கான பகுதியில் இருந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதன் காரணமாக பள்ளத்தாக்கின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல விவசாயிகள் வயல்களுக்குச் செல்ல அஞ்சுவதால், நெல் பயிர்களின் அறுவடை பாதிக்கப்படுவதாக அதிகாரிகள் கூறினர்.
மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் பெரும் கலவரம் மூண்டது. அப்போது, ஏராளமான வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன. இதனால் இடம்பெயா்ந்த மக்கள், அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.
இக்கலவரத்துக்குப் பிறகு இரு சமூகத்தினருக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இரு சமூகத்தினா் சாா்ந்த தீவிரவாதிகளும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுவதால் உயிா்ச்சேதம் தொடா்ந்து ஏற்பட்டு வருகிறது.
இதுவரை 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.