திசைகாட்டியை தமிழ் மக்கள் தவிர்க்க வேண்டும்” – சுமந்திரன் கோரிக்கை!!
“தமிழருக்கு தேசியப் பிரச்சினை ஒன்று இருப்பதை ஏற்க மறுக்கும் திசைகாட்டியை தமிழ் மக்கள் தவிர்க்க வேண்டும்” – சுமந்திரன் கோரிக்கை
இந்த அரசாங்கம் மாற்றமொன்றை உருவாக்குவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சென்ற தேர்தலில் மூன்று வீத வாக்குகளைப் பெற்றுவிட்டு இம் முறை ஒரு இடதுசாரியாக ஆட்சியைப் பிடித்திருப்பது மாற்றம் தான்.
ஆனால் அது எம் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றமல்ல.
எமது மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் இரண்டரை வருட கால ஆயுட் கொண்டதல்ல. தமிழரது அரசாட்சி மாற்ற எதிர்ப்பார்ப்பிற்கு வயது எழுபத்தைந்து.
இதை நான் ஜனாதிபதிக்கு பகிரங்கமாகவும், நேரடியாகவும் பல முறை சொல்லியிருக்கிறேன்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இங்கு வந்த அநுர குமார திசாநாயக . . .
“தெற்கில் மக்கள் ஒரு மாற்றத்தை வேண்டுகிறார்கள். அந்த மாற்றம் நிகழப் போகிறது. தமிழ் மக்கள் நீங்கள் அந்த மாற்றத்தில் பங்காளிகளாகாவிட்டால் அது தெற்கில் எதிர்மறையான சிந்தனைகளை உருவாக்குமல்லவா?” என்று வினவியிருந்தார்.
நான் சில நாட்களுக்கு முன்பு “யாழ்ப்பாணத்தில் வைத்து தமிழ் மக்கள் விரும்பும் அரசாட்சி மாற்றம் பற்றி அநுர குமார தன் நிலைப்பாட்டைத் தெரியப்படுத்த வேண்டும்” என பகிரங்கக் கோரிக்கை விடுத்திருந்தேன்.
இப்படியிருக்க, திசைகாட்டியின் நேற்றைய யாழ் பரப்புரைக் கூட்டத்தில் அவர் தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூடச் உதிர்க்கவில்லை.
ஆனால் தன் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில், 240 ஆம் பக்கத்தில் தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு 2015-2017 ரணில்-மைத்ரி அரசாங்க காலத்தில் தமிழரசுக் கட்சியின் உழைப்பால் உருவான புதிய அரசியலமைப்பு இடைக்கால வரைபை ஒற்றிய தீர்வை வழங்குவதாக அநுர குமார திசாநாயக சொல்லியிருந்தார்.
ஜனாதிபதியான பிறகு, தமிழ்த் தேசியப் பிரச்சினை பற்றி ஜனாதிபதி மூச்சுக் கூடத் திறக்கிறார் இல்லை. தமிழ்த் தேசியப் பிரச்சினையொன்று இந்த நாட்டில் இருப்பதாக ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
நாங்கள் தெளிவாகக் கேட்ட பிறகும், வாய் திறப்பதாயில்லை.
நாட்டில் முப்பதாண்டு கால ஆயுதப் போராட்டம் நடந்தது ஊழலுக்கு எதிராக இல்லை. அனுர குமார திசாநாயகவிற்கு இது நன்கே விளங்க வேண்டும். அவரும் ஆயுதம் ஏந்தி அரசுக் கெதிராகப் போராடியவர் தான். ஆயுதம் ஏந்திப் பெறமுடியாததை இப்போது ஜனநாயக வழியில் நீங்கள் பெற்றிருக்கிறீர்கள். எங்களுடைய வாழ்த்துக்கள். நல்ல விடயம்.
ஆனால், தமிழர் எம் அபிலாசைகள் குறித்து, நாங்கள் கேட்டிருந்த போதும் கூட, ஒரு வார்த்தை கூடச் சொல்லாமல் யாழில் திரும்பிச் சென்றிருக்கிறார்.
நிலங்களை விடுவிப்பேன். அரசியல் கைதிகளை விடுவிப்பேன் என்கிறார். நீங்கள் திறந்த 600 மீற்றர் ஒன்றும் பெரிதல்ல. அதே இடத்திலே நாங்கள் 8000 ஏக்கர்களை 20 வருட சட்டப் போராட்டத்தால் மீட்டவர்கள். அரசியல் கைதிகளை ரணில்-மைத்ரி அரசாங்கத்தில் நாங்கள் நூற்றுக் கணக்காக விடுவித்தோம். 613 மீற்றர்களை விடுவித்தது நல்லது. ஆனால், விடுவிக்கப்பட வேண்டிய நிலங்களையும், விடுவிக்கப்பட வேண்டிய அரசியல் கைதிகளையும் விடுவிப்பது ஒன்றும் பெரிய விடயமல்ல. விடுவிக்கத் தானே வேணும்! செய்யத் தான் வேண்டும்.
ஆனால் இந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை அரசாட்சி முறை.
தமிழ் வாக்காளர்களுக்கு நான் விடுக்கும் மிக முக்கியமான கோரிக்கை இது தான்: மாற்றமெனும் இந்த அலையிலே அள்ளுப்பட்டு மக்கள் திசைகாட்டிக்கு வாக்களிக்க வேண்டாம். அந்த மாற்றம் இப்போது தடுமாற்றத்திலிருக்கிறது.
அவர்களை நான் பெரிதாகச் சாடவில்லை. ஊழல்வாதிகள் என்று சொல்லவில்லை. அவர்கள் ஊழல்வாதிகளில்லை. எனக்குத் தெரியும்.
ஆனால், தமிழரெமக்கு அடிப்படையான தமிழ்த் தேசியப் பிரச்சினை என்றொன்று இருப்பதைக் கூடச் சொல்ல மனதில்லாமல் யாழ்ப்பாணம் வரை வந்து சென்றிருக்கிற அநுர குமார திசாநாயகவின் கட்சிக்கு . . . தமிழர் எவரும் வாக்களிக்கக் கூடாது.
திசைகாட்டிக்கு ஒரு ஆசனமேனும் யாழ்ப்பாணத்தில் கிட்டுவது, தமிழருக்குத் தேசியப் பிரச்சினை ஒன்றில்லை என்ற மிகத் தவறான செய்தியை நாட்டிற்குச் சொல்லும். பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
தமிழ்த் தேசியத்தின் உறைவிடமான யாழ்ப்பாணத்தில், தமிழரது கலாச்சாரத் தலை நகரான யாழ்ப்பாணத்தில் . . . தமிழ்த் தேசியப் பிரச்சினையொன்றில்லை என்ற போக்கில் நடக்கும் கட்சிக்கு, அரசாங்கத்திலிருக்கும் ஒரே காரணத்திற்காக ஒரு ஆசனமேனும் கிடைப்பது . . . எமது நீண்ட காலப் போராட்டத்தையும், அதற்காக நாம் செய்து வந்திருக்கும் உயிர்த் தியாகங்களையும் மழுங்கடிக்கும் செய்தியொன்றை நாட்டிற்குச் சொல்லி நிற்கும்.”
– இன்றைய ஊடக சந்திப்பில் சுமந்திரன் சொன்னவை.