கொல்லப்பட்ட 20 குழந்தைகள்! இஸ்ரேல் தாக்குதலால் லெபனான், காசாவில் பதற்றம்
லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்படும் அப்பாவி மக்கள்
வடக்கு லெபனான் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதிகள் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதலில் குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை லெபனானின் பைப்லோஸுக்கு(Byblos) அருகில் உள்ள அல்மாட்(Almat) பகுதி மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட 23 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
அதே போல வடக்கு காசாவில் இஸ்ரேலிய படைகளால் முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள இரண்டு வீடுகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
முதல் தாக்குதல் ஜபாலியாவில்(Jabalia) உள்ள வீட்டில் ஞாயிற்றுக்கிழமை முற்பகுதியில் நடத்தப்பட்டது, இதில் 13 குழந்தைகள் உட்பட குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
மீதமுள்ள 5 பேர் சப்ரா(Sabra) பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர், மேலும் சிலரை காணவில்லை என சிவில் பாதுகாப்பு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் விளக்கம்
தாக்குதல் நடத்தப்பட்ட இடங்களில் ஹிஸ்புல்லா ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வான்வழி கண்காணிப்பு மற்றும் துல்லியமான உளவு தகவல்கள் ஆகியவற்றை கொண்டு பொதுமக்களுக்கான ஆபத்தை குறைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.