ட்ரம்ப் வெற்றியால் அச்சம்: சுவிட்சர்லாந்தின் திட்டம்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ள விடயம், பல நாடுகளில், பல விதத்தில் அச்சத்தையும் கவலையையும் உருவாக்கியுள்ளது.
ட்ரம்ப் வெற்றியால் அச்சம்
சுவிட்சர்லாந்து, உலகிலேயே இயந்திரங்கள், கைக்கடிகாரங்கள் மருந்துகள் போன்ற பொருட்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்வது அமெரிக்காவுக்குத்தான்.
இந்நிலையில், அமெரிக்கா தான் இறக்குமதி செய்யும் பொருட்களின் மீது 20 சதவிகிதம் வரை வரி விதிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால், சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்தில் முதல் கட்டமாக 0.2 சதவிகிதம் இழப்பு ஏற்படும் என்றும், அதே நிலை தொடருமானால், ஒரு சதவிகிதம் வரை இழப்பு ஏற்படும் என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பாதுகாப்பு தொடர்பில் கவலை
சுவிட்சர்லாந்துக்கு மற்றொரு கவலையும் உருவாகியுள்ளது. அது, பாதுகாப்பு தொடர்பிலான கவலை ஆகும்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்தை ஆளும் தேசிய கவுன்சிலின் முன்னாள் உறுப்பினரான Gerhard Pfister, ட்ரம்ப் வெற்றியைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்து நேட்டோ அமைப்புடன் நெருக்கம் காட்டவேண்டும் என்று கூறியுள்ளார்.
சுவிட்சர்லாந்து ஒரு நடுநிலை நாடு. அது அப்படியேதான் நீடிக்கவேண்டும் என்று கூறும் Pfister, என்றாலும், சுவிட்சர்லாந்து நேட்டோ அமைப்புடன் நெருக்கமாகவில்லையென்றால், அதனால் தன்னைத்தான்
பாதுகாத்துக்கொள்ளமுடியாது என தான் கருதுவதாகத் தெரிவிக்கிறார்.
ஆகவே, சுவிஸ் விமானப்படை ஐரோப்பாவுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்கிறார் அவர்.
மேலும், ரஷ்ய உக்ரைன் போர் குறித்து கருத்து தெரிவித்த அவர், ட்ரம்ப் உக்ரைனில் உடனடி அமைதிக்கு வற்புறுத்துவாரானால், அது ரஷ்யாவுக்கு சாதகமான அமைதியாகவே இருக்கும் என தான் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.