தேசிய மக்கள் சக்தி சொன்னதை செய்யவில்லை.!! – கீதநாத் காசிலிங்கம்!!
இதுவரை நாம் வடக்கு கிழக்கில் செய்த விடயங்களை ஒரு தரப்பு தாம் செய்தோம் என மார்தட்டினார்கள். மற்றொரு தரப்பு தமிழ் தேசியத்தை வைத்து பிளவுபடுத்துகிறார்கள் என தெரிவித்த ஶ்ரீலங்கா பொது ஜன பெரமுன யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் கீதநாத் காசிலிங்கம்
மதுபான சாலை அனுமதிப்பத்திரம் பெற்று விற்பனை செய்துவிட்டு நவம்பர் மாதம் மாவீரர் நாளுக்கு அஞ்சலிக்க வநதிருப்பர் என குற்றஞ்சாட்டினார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
எமது கட்சி மொட்டு சின்னத்தில் முதல் முறையாக யாழ்ப்பாண மாவட்டத்தில் களமிறங்கியுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணம் கண்டிராத அபரீத வளர்ச்சியை எமது கட்சியே செய்தது. இங்குள்ள சிலர் அரசாங்கத்திடம் வற்புறுத்தி பெற்றதாக கூறுகின்றனர். ஆனால் எமது கட்சி தலைவரிடம் வற்புறுத்தி வாங்க முடியாது.
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக எங்களை வெற்றிபெற வைக்கவில்லை. எமக்கு எதிராக செய்யப்பட்ட பிரசாரத்திற்கு நாம் பதில் சொல்லவில்லை. தேர்தல் முடிந்தவுடன் ஓடமாட்டோம். யாழ் மாவட்டத்திலும் நாடாளவிய ரீதியிலும் நாம் பின்தங்க உள்ளோம் என்ற உண்மையான சொல்ல வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் சகல விடயங்களுக்கும் நிச்சயம் பதில் வழங்குவோம். எதிர்வரும் காலங்களில் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஓவ்வொரு மாதமும் யாழ்ப்பாணம் வருகை தருவார். மொட்டுக்கான மறுமலரச்சியாக இனிவரும் காலம் அமையும்.
தேசிய மக்கள் சக்தி தெற்கில் இருந்து மக்களை கூட்டி கூட்டம் நடத்தினார். இவர்கள் ஊழல் பைல் என கண்காட்சி நடத்தினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. அரசியல் கைதிகள் விடுதலை, 13 தொடர்பாக எதுவும் செய்யவில்லை. எமது அரசாங்கத்தில் 13000 அரசியல் கைதிகளை விடுதலை செய்து வேலை வாய்ப்பு, மோட்டார் சைக்கிள்கள் என பலதை வழங்கினோம். நாம் செய்ததை சொல்லி காட்டவில்லை. ஆனால் தேசிய மக்கள் சக்தி சொன்னதை செய்யவில்லை.
தெற்கில் ஒரு கதை. வடக்கில் ஒரு கதை என தேசிய மக்கள் சக்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஜனாதிபதி சொல்கிறார் எப்போது விடுவிப்பார் என்பதை சொல்ல வேண்டும். எங்கள் கட்சியை எதிரியாக தமிழ் மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் மக்களுக்கு நல்லவராக வேடம் போட்டு தேசிய மக்கள் சக்தி மக்களை முட்டாளாக்குகிறார்கள்.
தெற்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியை நம்புகின்றனர். வடக்கு மக்கள் நம்ப மாட்டார்கள். கேள்வி கேட்பார்கள். வாக்குகளை இழப்போம் என தெரிந்தும் நாமல் ராஜபக்ஷ 13 பற்றி இது தான் எமது நிலைப்பாடு என தெளிவாக சொன்னார். ஜேவிபி 13 தொடர்பாக தமது நிலைப்பாட்டை சொல்வார்களா?
இதுவரை நாம் செய்ததை ஒரு தரப்பு தாம் செய்தோம் என மார்தட்டினார்கள். ஒரு தரப்பு தமிழ் தேசியத்தை வைத்து பிளவுபடுத்துகிறார்கள். மதுபான சாலை அனுமதிப்பத்திரம் பெற்று விற்பனை செய்துவிட்டு நவம்பர் மாதம் மாவீரர் நாளுக்கு அஞ்சலிக்க வநதிருப்பர். மாவீரர் நாளுக்கு எந்த இடத்திலும் நாம் இடையூறு விளைவிக்கமாட்டோம். இதனை கட்சி மட்டத்தில் நாம் வலியுறுத்துவோம். அரசியல்வாதிகள் வந்தால் அடித்து துரத்துங்கள். மக்கள் உயிரிழந்த உறவுகளை நினைவுருவதற்கு உரிமை உண்டு – என்றார்.