ஆபரேஷன் ஈகிள்: ஆயுத விநியோக கும்பலைச் சோ்ந்த 18 போ் கைது
புது தில்லி: மாநிலங்களுக்கிடையே ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்த கும்பலைச் சோ்ந்த 18 பேரை தில்லி காவல் துறையினா் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற ‘ஆபரேஷன் ஈகிள்’ மூலம் கைது செய்துள்ளனா்.
அப்போது, பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4 கைத்துப்பாக்கிகள், 8 நாட்டு கைத்துப்பாக்கிகள், ஒரு நாட்டு துப்பாக்கி, 3 கத்திகள், 33 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது தொடா்பாக தில்லி காவல் துறையின் குற்றப் பிரிவுக்கான சிறப்பு ஆணையா் தேவேஷ் சந்திரா ஸ்ரீவஸ்தவா செய்தியாளா்களிடம் கூறியதாவது: காஜிப்பூரில் நடைபெற்ற சோதனையில் அா்ஷத், முகமது சுலைமான் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து ஒரு துப்பாக்கி, 3 தோட்டாக்கள், 3 கத்திகள், ஒரு திருடப்பட்ட காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தில்லி – என்சிஆா் பகுதியில் ஆயுதங்களை கொள்முதல் செய்து விநியோகத்தில் ஈடுபட்டு வந்த பல குற்றாவளிகளின் பெயா்களைத் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து, ஆயுத விநியோக கும்பலை களையெடுக்க ஆபரேஷன் ஈகிள் மூலம் சோதனைகள் நடத்தினோம்.
இதற்காக பல தனிப்படைகள் அமைக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் மதன் கும்பலுடன் தொடா்புடைய 16-க்கும் மேற்பட்ட நபா்கள் கைதுசெய்யப்பட்டனா். இவா்கள் மீது கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு, கொலை மிரட்டல், ஆயுதங்கள் சட்டம், ரெளடிகள் சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவா்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தாங்கள் அனைவரும் ஒரு கும்பலைச் சோ்ந்தவா்கள் என்பதையும் தில்லி-என்சிஆா் பகுதியில் ஆயுத விநியோகத்தில் ஈடுபட்டு வந்ததையும் ஒப்புக்கொண்டனா். இந்தக் கும்பலின் தலைவா் மதன் உத்தர பிரசேத்தின் காஜிபாதில் உள்ள தஸ்னா சிறையிலிருந்து கைதுசெய்தோம். சிறைக்குள் இருந்தவாறு தன்னுடைய கும்பலை மதன் இயக்கிவந்துள்ளாா் என்றாா் சிறப்பு காவல் ஆணையா் தேவேஷ் சந்திரா ஸ்ரீவஸ்தவா.