ரூ.8,000 கோடி செலவில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள்.., விரைவில் இந்திய கடற்படையில் இணைப்பு
ரஷ்யாவில் ரூ.8,000 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் விரைவில் இந்திய கடற்படையில் இணைக்கப்படவுள்ளன.
2 போர்க்கப்பல்கள் இணைப்பு
இந்திய கடற்படைக்காக 2 போர்க்கப்பல்களை ரஷ்யாவிடம் இருந்து தயாரிக்க கடந்த 2016-ம் ஆண்டில் இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் போடப்பட்டது.
அந்தவகையில், கடந்த 2018 -ம் ஆண்டில் ரஷ்யாவின் கலினின்கிராட்டில் உள்ள யந்தர் கப்பல் கட்டும் தளத்தில் போர்க்கப்பல்கள் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து, 2022 -ம் ஆண்டில் இந்த போர்க்கப்பல்கள் இந்தியாவிற்கு ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ரஷ்யா- உக்ரைன் போர் மற்றும் கொரோனா பெருந்தொற்று காரணமாக போர்க்கப்பல்கள் தயாரிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டது.
இதனால், 2 போர்க்கப்பல்களை மட்டும் ரஷ்யாவில் தயாரிக்கவும், மீதமுள்ள 2 போர்க்கப்பல்களை இந்தியாவில் உள்ள கோவாவில் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ரஷ்யாவில் 2 போர்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வெள்ளோட்டம் நிறைவு செய்யப்பட்டதால் வரும் டிசம்பரில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதற்காக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டிசம்பர் மாதம் ரஷ்யாவிற்கு சென்று போர்க்கப்பல்களை இணைக்கவுள்ளார்.
இதற்கு ஐஎன்எஸ் துஷில் என்று பெயர் வைக்கப்பட்டது. துஷில் என்றால் சமஸ்கிருதத்தில் பாதுகாவலன் என்று பெயராகும்.
இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறுகையில், “ரூ.8000 கோடி செலவில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்கள் இந்தியாவில் இணைக்கப்படவுள்ளன.
இதில், முதல் போர் கப்பல் டிசம்பர் மாதத்திலும், இரண்டாவது போர் கப்பல் அடுத்த வருடம் தொடக்கத்திலும் இணைக்கப்படும்.
இந்த போர்க் கப்பல் மூலம் எதிரிகளின் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளை எளிதில் அழிக்க முடியும். மேலும், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் பிரம்மோஸ் ஏவுகணைகள் இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
409 அடி நீளம், 50 அடி உயரம் கொண்ட இந்த போர்க்கப்பலின் எடை 4,000 டன் ஆகும். இதில், ஹெலிகாப்டரை நிறுத்த இடவசதியும் உள்ளது. மேலும், இதில் ஒருமுறை எரிபொருள் நிரப்பினால் 30 நாட்கள் வரை கடலில் பயணம் செய்யலாம்.
அதேபோல, இந்தியாவில் உள்ள கோவாவில் தயாரிக்கப்படும் மற்ற 2 போர்க்கப்பல்கள் அடுத்த ஆண்டு ஜூலையில் கடற்படையில் இணைக்கப்படும்.