டிஎஸ்பிக்கு காய்கறி கொடுத்து உதவிய வியாபாரி.., 14 ஆண்டுகளுக்கு பின் தேடி சந்தித்து நெகிழ்ச்சி
கல்லூரி படிக்கும்போது பணமில்லாத நேரத்தில் காய்கறி கொடுத்து உதவிய வியாபாரியை சந்தித்து டிஎஸ்பி பரிசு கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டிஎஸ்பியின் நெகிழ்ச்சி சம்பவம்
இந்திய மாநிலமான மத்திய பிரதேசம், பன்னா அருகே உள்ள தேவ்கான் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் படேல் (33). இவர் தற்போது அம்மாநிலத்தில் உள்ள குவாலியர் பெஹாத் டிவிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றி வருகிறார்.
இவரது தந்தை ஒரு கைவினை கலைஞர் ஆவார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவருக்கு படிப்பதற்கு கூட பணமில்லாம் கஷ்டப்பட்டார். 2009-2010 காலக்கட்டத்தில் போபால் டாக்கிஸ் ஏரியா அருகே இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தார்.
அப்போது, பணமில்லாத நேரத்தில் காய்கறி வியாபாரம் செய்த சல்மான் கான் என்பவர் காய்கறி கொடுத்து சந்தோஷ் படேலுக்கு உதவி செய்துள்ளார்.
இதனால், இவர்களுக்கு இடையே நல்ல நட்புறவு இருந்துள்ளது. பின்னர், கல்லூரி படிப்பு முடிந்ததும் சந்தோஷ் தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து, வனத்துறை மற்றும் பொலிஸ் பணியில் சேர தேர்வு எழுதி, 2017 ம் ஆண்டு மத்திய பிரதேச மாநில பொலிஸ் தேர்வில் சந்தோஷ் படேல் தேர்ச்சி பெற்றார்.
இந்நிலையில், தற்போது டிஎஸ்பியாக பணியாற்றி வரும் சந்தோஷ் படேலுக்கு உதவி செய்த காய்கறி வியாபாரியை சந்திக்க வேண்டும் என்று நீண்ட காலமாக எண்ணம் இருந்துள்ளது.
தற்போது , 4 நாள் பயிற்சிக்காக போபாலுக்கு சந்தோஷ் படேல் வந்த போது சல்மான் கான் கடை வைத்திருந்த இடத்துக்கு சென்றார். அங்கு, சல்மான் கானை பார்த்ததும் நியாபகம் இருக்கிறதா என்று கேட்டார். உடனே அவரும் நியாபகம் இருக்கிறது, காய்கறி வாங்கி கொள்ளுங்கள் என்று சிரித்தபடி கூறினார்.
பின்னர், சல்மான் கானுக்கு ஸ்வீட் பாக்ஸ் மற்றும் பணத்தை சந்தோஷ் படேல் கொடுத்தார். அதனை வாங்க மறுத்த காய்கறி வியாபாரி, டிஎஸ்பி கட்டாயப்படுத்தியதால் வாங்கி கொண்டார்.
14 ஆண்டுகள் கழித்து இருவரும் தங்களது நினைவுகளை பரிமாறி கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.