கொழும்பின் முக்கிய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலால் மக்கள் பாதிப்பு
கொழும்பு, ராஜகிரிய சந்தி பகுதியில் (மேம்பாலத்திற்கு அருகில்) தினமும் காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அலுவலக ஊழியர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்குகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
சில காலமாக நிலவி வரும் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படவில்லை என பலரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
ராஜகிரிய பிரதான வீதிக்கு நாவல மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து (இரண்டாம் வீதிகள் ஊடாக) பிரவேசிக்கும் மக்கள், குறிப்பாக காலை வேளைகளில் அதிக வாகன நெரிசல் காரணமாக மணிக்கணக்கில் அலைய வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
உடனடி தீர்வு
நாடாளுமன்றம் உட்பட பல அரச நிறுவனங்கள் அருகாமையில் அமைந்துள்ளதால் ஆயிரக்கணக்கான அலுவலக ஊழியர்கள் பக்க வீதிகளில் இருந்து ராஜகிரிய பிரதான வீதிக்குள் பிரவேசிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேம்பாலம் இருந்தும் இப்பகுதியில் சில காலமாக நெரிசல் நீடிப்பதால், இப்பிரச்சினைக்கு அரசும், காவல்துறை உயரதிகாரிகளும் உடனடி தீர்வு காண வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
வேலைத்திட்டம்
இது தொடர்பில் பொலிஸ் போக்குவரத்து தலைமையகத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக்க ஹப்புகொடவிடம் வினவிய போது, அந்த பகுதியில் காலை வேளையில் வாகன நெரிசல் காணப்பட்டதை ஒப்புக்கொள்கின்றேன்.
போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாகவும் தேர்தலின் பின்னர் அந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் கடமைகள் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர்களை போதியளவு போக்குவரத்து கடமைகளில் ஈடுபடுத்த முடியவில்லை எனவும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.