டாக்டர் மீது தாக்குதல் எதிரொலி.. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!
சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்தவர் பிரேமா. இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதற்காக அவர் சில காலமாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இன்று காலை பிரேமாவின் மகனான விக்னேஷ் என்பவர் கிண்டி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு புற்றுநோய் பிரிவில் இருந்த மருத்துவர் பாலாஜியை தான் மறைத்துவைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், பாலாஜி நிலை தடுமாறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
இந்த சம்பவத்தை செய்துவிட்டு மிகவும் இயல்பாக விக்னேஷ் அங்கிருந்து வெளியேவந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த சக மருத்துவர்கள், தனியார் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து அவரை மடக்கி பிடித்துள்ளனர். அதனை அடுத்து அங்கு வந்த காவல்துறையினர் விக்னேஷை கைது செய்து விசாரித்துவருகின்றனர். அதேசமயம், கத்தி குத்துக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி மீட்கப்பட்டு உடனடியாக அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
அதேசமயம், அரசு மருத்துவர் பணி நேரத்தில் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், அரசு மருத்துவர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் மருத்துவ சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இதனை அடுத்து அரசு தரப்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவச் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில், மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்நிலையில் மருத்துவ சங்கத்தினருடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “நோயாளிகளுடன் வரும் அட்டெண்டர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். நோயாளியுடன் வருபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் அனைத்து மருத்துவமனைக்களிலும் தொடங்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.