;
Athirady Tamil News

அநுர அலையில் தமிழ் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்ச்சுனா

0

இலங்கையில் ஏற்பட்ட அநுர அலை தென்னிலங்கை அரசியல் மட்டுமன்றி, தமிழர் தேசிய கட்டமைப்பை தகர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகளுக்கு அமைய, வட மாகாணத்தில் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

தமிழர் தாயகத்தில் பாரம்பரிய தமிழ் கட்சி பிளவுபட்டு பல பிரிவுகளாக களமிறங்கிய பெரும் தோல்வியை சந்திதுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அர்ச்சுனா ராமநாதன்
மாறாக கடந்த சில மாதங்களாக பெரும் பேசுபொருளாக இருந்த வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் மீதான மக்களின் ஆதரவு தமிழ் கட்சிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறுகிய காலத்தில் பிரபலமான வைத்தியர், நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்புகள் தற்போது ஏற்பட்டுள்ளதாக தேர்தல் முடிவுகள் மூலம் அறிய முடிகிறது.எனினும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இதுவரை வெளியான யாழ் மாவட்ட தேர்தல் முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தி 59688 வாக்குகளையும் இலங்கை தமிழரசு கட்சி 53250 வாக்குகளையும், சுயேட்சையாக போட்டியிட்ட வைத்தியர் அர்ச்சுனா ராமநாதன் 21433 வாக்குகளை பெற்றுள்ளார்.

அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு சாவகச்சேரியில் 5,978 வாக்குகளும், யாழ்ப்பாணத்தில் 1,067, நெடுந்தீவில் 601 வாக்குகளும் கிளிநொச்சியில் 2,098 வாக்குகளும், மானிப்பாயில் 2,413 வாக்குகளும், நல்லூரில் 2,279 வாக்குகளும், பருத்தித்துறையில் 1,572 வாக்குகளும் வட்டுக்கோட்டையில் 1,877 வாக்குகளையும் பெற்றுள்ளார். அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

இலங்கையில் அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்தவர்கள் மற்றும் நாடாளுமன்றத்தை பல தடவைகள் பிரதித்துவம் செய்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு இம்முறை மக்களால் ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி 35 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 8 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2 ஆசனங்களையும், புதிய ஜனநாயக முன்னணி 1 ஆசனத்தையும், இலங்கை தமிழரசு கட்சி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.