இன்னொரு ஜனாதிபதியாகவே நடந்துகொள்ளும் எலோன் மஸ்க்… கடும் அதிருப்தியில் ட்ரம்ப் அணி
அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் டொனால்டு ட்ரம்ப் தெரிவாக காரணமானவர்களில் எலோன் மஸ்கும் ஒருவர் என கூறப்படும் நிலையில், அவர் தற்போது தெரிவு செய்யப்படாத ஜனாதிபதியாக நடந்துகொள்வதாக புகார் எழுந்துள்ளது.
தெரிவு செய்யப்படாத ஜனாதிபதி
அரசிலுக்கே பொருத்தமில்லாத நபர், அரசியல்வாதியாகும் தகுதி டொனால்டு ட்ரம்பிடம் இல்லை என கடும் விமர்சனம் முன்வைத்திருந்த பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க், இந்த முறை டொனால்டு ட்ரம்ப் ஜனாதிபதியாக தெரிவாக பரப்புரைகளில் களமிறங்கியிருந்தார்.
ஆனால் தற்போது எலோன் மஸ்க் தெரிவு செய்யப்படாத இன்னொரு ஜனாதிபதியாக நடந்து கொள்வதாக ட்ரம்பின் அணியினரே கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தேர்தல் பரப்புரையின் போது எலோன் மஸ்கின் முன்னெடுத்த செயல்பாடுகள் தற்போது அவரை, ஜனாதிபதி ட்ரம்பின் அணியில் ஒரு பொறுப்புக்கு வர காரணமாக அமைந்துள்ளது.
இருப்பினும், புதிய இந்த இருவர் கூட்டணி, ட்ரம்ப் அணியின் பெருந்தலைகளை அதிருப்தியடைய வைத்துள்ளது. மட்டுமின்றி, ட்ரம்பின் இந்த அறுதிப்பெரும்பான்மை வெற்றிக்கு காரணம் தாம் மட்டுமே என தமது நெருங்கிய வட்டாரத்தில் எலோன் மஸ்க் கூறி வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது.
கிட்டத்தட்ட தினமும்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அரசின் திறமைத் துறைக்கு இரு தலைவர்களில் ஒருவராக எலோன் மஸ்க் நியமிக்கப்பட்டுள்ளார். இன்னொரு தொழிலதிபர் விவேக் ராமசுவாமியுடன் இணைந்து, செலவில் அமெரிக்க அரசாங்கத்தை கட்டுப்படுத்தவும் செலவு குறைக்கும் வழிகள் குறித்து ஜனாதிபதிக்கு மஸ்க் ஆலோசனை வழங்குவார்.
உண்மையில், இது உத்தியோகப்பூர்வ அமெரிக்க அரசாங்கத்தின் துறை அல்ல. இது எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசுவாமி ஆகிய இரு தொழிலதிபர்களையும் கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட தினமும் ட்ரம்பின் கலிபோர்னியா இல்லத்திற்கு எலோன் மஸ்க் சென்று நேரம் செலவிடுவதாக கூறப்படுகிறது. மட்டுமின்றி, ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதியுடனான தொலைபேசி உரையாடலின் போதும் எலோன் மஸ்க் உடனிருந்துள்ளார்.
சமீபத்தின் ஈரான் தூதர்களுடன் எலோன் மஸ்க் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மேலும், ட்ரம்ப் கலந்துகொண்ட ஒவ்வொரு கூட்டத்திலும் மஸ்க் உடனிருந்துள்ளார், இதில் சில பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புகளும் அடங்கும் என்றே தகவல் கசிந்துள்ளது.