;
Athirady Tamil News

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா தேர்தல் பரப்புரை… புயலை கிளப்பும் ஹெலிகாப்டர் அரசியல்!

0

ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மாநிலங்களில் தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் அதேநேரம், ஹெலிகாப்டர் அரசியலும் புயலை கிளப்பியுள்ளது. நடந்தது என்ன?

81 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு கடந்த 13 ஆம் தேதி முதல் கட்டமாக 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டாவது கட்டமாக மீதமுள்ள தொகுதிகளுக்கு வரும் 20 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதேபோல் 288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிராவிலும் வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

இதனை ஒட்டி, பிரதான தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஜார்க்கண்ட், மகாரஷ்டிராவில் முகாமிட்டு வாக்குகளை சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அரசியல் பிரபலங்கள் பயணிக்கும் ஹெலிகாப்டர்களை தேர்தல் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
இதன் ஒரு கட்டமாக, அண்மையில் பரப்புரைக்கு சென்ற சிவசேனா கட்சி உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரேவின் ஹெலிகாப்டரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது, ஆத்திரமடைந்த உத்தவ் தாக்கரே, பாஜக கூட்டணிக் கட்சிகளிடம் இதுபோன்ற சோதனைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்வதில்லை என்று குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில் மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் சென்ற ஹெலிகாப்டர்களில் தேர்தல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதனிடையே மகாராஷ்டிராவின் ஹிங்கோலி சட்டமன்றத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது, ​​தான் சென்ற ஹெலிகாப்டரை தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வுசெய்த வீடியோவை அமித் ஷா பகிர்ந்துள்ளார்.

இந்த நிலையில் ஜார்க்கண்ட்டில் தியோகர் நகரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்று பிரதமர் மோடி உரையாற்றினார். கூட்டம் முடிந்த பிறகு, அங்கிருந்து சிறிய ரக விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி திரும்ப இருந்தார். ஆனால், அவர் பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணி நடந்தது. அதன்பின்னர் டெல்லியில் இருந்து மாற்று விமானம் வரவழைக்கப்பட்டு,அதில் பிரதமர் புறப்பட்டு தலைநகர் திரும்பினார். பிரதமர் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவர் 2 மணி நேரம் தியோகரில் காத்திருக்கும் சூழல் எழுந்தது. அதுவரை அப்பகுதியில் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.

பிரதமர் மோடியின் பயணத் திட்டம் காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் புறப்பட அனுமதி மறுக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

பரப்புரைக்காக கோட்டாவுக்கு சென்றிருந்த ராகுல் காந்தி, அங்கிருந்து வேறு நகரத்துக்கு ஹெலிகாப்டரில் புறப்பட திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரின் ஹெலிகாப்டருக்கு விமான கட்டுப்பாட்டு ஆணையம் உரிய நேரத்தில் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ராகுல் காந்தி, ஹெலிகாப்டரில் சுமார் 1 மணி நேரம் காத்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.