;
Athirady Tamil News

சுமந்திரனின் கோரிக்கையை நிராகரித்த கஜேந்திரகுமார்..!

0

நல்லாட்சி காலத்தில் முன்னெடுக்கப்பட்ட ஏக்கிய ராஜ்ஜிய என்ற புதிய அரசமைப்பு வரைபை அநுர அரசு மீளக் கொண்டு வரப் போவதாகவும், தான் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் அந்தச் செயற்பாட்டைக் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கையாளுவார் என்றும் சுமந்திரன் தெரிவித்திருந்த நிலையில், அந்த வரைபை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (Jaffna) உள்ள தமது கட்சி அலுவலகத்தில் நேற்று (16) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தேசியம் சார்ந்த அரசியல்
மேலும் தெரிவித்ததாவது, “தேசியம் சார்ந்த அரசியலுக்கும் கொள்கை சார்ந்த தமிழ் மக்களுடைய இருப்பு சார்ந்த விடயங்களுக்கும் எதிர்காலம் மிகவும் சவாலுக்குரிய ஒன்றாகவே நாங்கள் பார்க்கின்றோம்.இதில் வரப் போகின்ற ஐந்து வருடங்களில் மிக முக்கியமானது முதலாவது வருடம்தான்.

தேர்தல் முடிவுக்குப் பிற்பாடு கூட ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தங்களது கட்சிக்கு வடக்கில் ஆசனங்கள் கிடைத்துள்ளன எனவும், இனவாதத்தை மக்கள் நிராகரித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார். அந்தக் கருத்திலேயே தமிழ் மக்களுக்கு இருக்கக் கூடிய ஆபத்துக்கள் மிகத் தெளிவாக அம்பலமாகியுள்ளன.

மேலும், புதிய அரசமைப்பு வரைபுக்கு எதிராக, அதை நாங்கள் தடுத்து இது எமது மக்களின் இணைப்புக்கு முரணானது என்ற பலமான செய்தியைக் கொடுப்பதன் ஊடாக அவர்கள் சரியான ஒரு வரைபைத் தயாரிப்பதற்கும், அவர்களது செயற்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும்தான் எங்களுடைய முயற்சிகளை முன்னெடுக்கப் போகின்றோம்.

அதற்குத் தமிழரசுக் கட்சியாக இருக்கலாம், ஏனைய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம், நாடாளுமன்றத்துக்கு வெளியில் இருக்கக் கூடிய தமிழ்க் கட்சிகளாக இருக்கலாம், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களாக இருக்கலாம், அனைவரையும் ஒன்றிணைத்து அந்த விடயங்களை முன்கொண்டு செல்ல நாங்கள் தயாராக இருக்கின்றோம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.