;
Athirady Tamil News

வவுனியாவில் இன்று சிவமோகன் வழங்கிய குற்றப்பத்திரிகையை வாங்க மறுத்த சுமந்திரன்

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையின் பிரதியை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வவுனியாவில் இன்று வைத்து வழங்க முற்பட்டபோது அதனைக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வாங்க மறுத்தார்.

தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டம் வவுனியா – ஈரப்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று நடைபெற்றது.

இதன்போது கட்சியின் பதில் பொதுச்செயலாளரின் பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயற்பாடுகளால் கட்சியின் கூட்டுப் பொறுப்பு உருக்குலைக்கப்பட்டது எனவும், அதனை விசாரணை செய்யுமாறு கோரியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனால் கட்சியின் பதில் பொதுச்செயலாளருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

அந்தக் குற்றப்பத்திரிகையின் பிரதியை இன்றைய கூட்டத்துக்கு வருகை தந்த அனைவருக்கும் சிவமோகன் வழங்கியிருந்தார்.

இந்நிலையில் சுமந்திரனுக்கும் அதனை வழங்க முற்பட்டபோது அவர் அதனைப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டுச் சென்றார்.

அந்தக் குற்றப்பத்திரிகையில், கட்சி மாநாட்டுக்கு முன்னர் ஆலோசனைக் கூட்டம் நடத்தாமை, சுகயீனம் எனக் கூறி பொதுக்குழு கூட்டத்துக்கு வராமை, யாப்புக்கு முரணாகத் தேர்தல் நியமனக் குழுவை நியமித்தமை, கட்சி உருக்குலைய காரணமாக இருந்தமை, முல்லைத்தீவு மாவட்டக் குழுவின் ஆலோசனையின்றி தேர்தல் நியமனங்கள் வழங்கியமை போன்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த சிவமோகன்,

“தோற்றவர்கள் நாடாளுமன்றத் தேர்தல் கேட்கக் கூடாது என்று சொன்னவர் யார்? அப்படி ஒரு முடிவு கட்சி எடுக்கவில்லை. கட்சி எடுக்காத முடிவை கட்சியின் பேச்சாளர் என்ற போர்வையில் உட்புகுத்தக் கூடாது.

முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் என்ற அவரது கருத்து தமிழரசுக் கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அது கட்சி எடுத்த முடிவா? இல்லையே. போரை நீங்கள் ஏற்கவில்லை. நீங்கள் கொழும்பில் இருந்தீர்கள், நாங்கள் இந்த மண்ணில் இருந்தோம். அதை ஏற்பதா? இல்லையா? என்று நாங்களே தீர்மானிக்க வேண்டும். அதை நீங்கள் சொல்லத் தேவையில்லை.

தோற்றவர்கள் மீண்டும் தேர்தல் கேட்கக் கூடாது என்று கூறிவிட்டு தேசியப் பட்டியல் வழங்குவதற்கு இனி இங்கு போராட்டம் நடக்கும். நான் எடுக்கமாட்டேன் என்று சொல்லி அவரும், நீங்கள் எடுங்கோ என்று எங்கட ஆக்களும் சொல்லி சில நேரம் கொடுக்கப்படலாம். அது பிழை.

படுதோல்வியடைந்த சுமந்திரன் மற்றும் தமிழரசுக் கட்சியை உருக்குலைத்த சத்தியலிங்கம் ஆகியோர் தாங்களாகவே பதவிகளில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும்.

தேசியப் பட்டியல் ஆசனத்தை வன்னிக்குக் கொடுக்க வேண்டும் என்றால் அது இரண்டாவது விருப்பு வாக்கை எடுத்தவருக்கே வழங்க வேண்டும்.” – என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.