புதிய சாதனை படைத்த டைட்டானிக் கேப்டனின் தங்க கடிகாரம்! எவ்வளவு தெரியுமா
டைட்டானிக் (Titanic) கப்பலில் சென்ற பயணிகள் 700 பேரை காப்பாற்றிய கேப்டனின் தங்க கடிகாரம் மிக உயரிய விலைக்கு ஏலத்தில் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.
1912ம் ஆண்டு ஏற்பட்ட டைட்டானிக் கப்பல் விபத்தின் போது உயிருக்கு போராடிய நூற்றுக்கணக்கானோரை உயிருடன் மீட்ட கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானுக்கு பரிசளிக்கப்பட்ட “தங்க சட்டைப் பை கடிகாரமே”(gold pocket watch) இவ்வாறு விற்பனையாகியுள்ளது.
ஏலத்தில் மிக உயரிய விலையான £1.56 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டைட்டானிக் கப்பல்
18 கேரட் டிஃபனி & கோ.வின் (18-carat Tiffany & Co.) தங்க சட்டைப் பை கடிகாரமானது, 1912ம் ஆண்டு ஏற்பட்ட டைட்டானிக் கப்பல் விபத்தின் போது உயிரிழந்த 3 பணக்கார தொழிலதிபர்களின் விதவை மனைவிகளால் முன்பு கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரானுக்கு(Arthur Rostron) பரிசளிக்கப்பட்டது.
டைட்டானிக் கப்பல் பனிப்பாறைகள் மீது மோதி விபத்தில் சிக்கியது தொடர்பான அவசர செய்தியை கேட்ட உடன் விரைந்து செயல்பட்டு, தனது கார்பதியா(Carpathia) கப்பலை திசை திருப்பி நூற்றுக்கணக்கானோரை கேப்டன் ஆர்தர் ரோஸ்ட்ரான் காப்பாற்றி இருந்தார்.
இந்நிலையில், டைட்டானிக்கின் மிகப்பெரும் நினைவலைகளை சுமந்துள்ள இந்த கடிகாரம், ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் அண்ட் சன்(Henry Aldridge and Son) என்ற நிறுவனத்தால் அமெரிக்காவை சேர்ந்த தனியார் சேகரிப்பாளருக்கு விற்கப்பட்டுள்ளது.
புதிய சாதனை
அத்துடன் இதுவரை ஏலத்தில் விலை போன டைட்டானிக் கப்பல் தொடர்புடைய பொருட்களின் உச்ச மதிப்பை இந்த பைக் கடிகாரம் பெற்றுள்ளது.
ஆர்எம்எஸ் டைட்டானிக் என்ற சொகுசு கப்பல் 1912 ஏப்ரல் 15 அன்று வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறையில் மோதி மூழ்கியது. சவுத்தாம்ப்டனில் இருந்து நியூயார்க் நகரத்திற்கு தனது முதல் பயணமாக சென்று கொண்டிருந்தபோது நடந்த இந்த விபத்தில் 1,500 க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.
இது, வரலாற்றில் மோசமான கடல் விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. டைட்டானிக் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட வயலின், 2013ல் ரூ.11.65 கோடிக்கு விற்கப்பட்டது.
“இந்த வயலின் தான் 11 ஆண்டுகளாக செலுத்தப்பட்ட அதிகபட்ச தொகை என்ற சாதனையைப் படைத்திருந்தது.
தற்போது இந்த தங்க கடிகாரம் ரூ.16.50 கோடிக்கு ஏலத்தில் விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.