;
Athirady Tamil News

போரூரில் ரூ.4,276 கோடியில் கடல்நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தீவிரம்

0

சென்னை போரூரில் ரூ.4,276.44 கோடி மதிப்பில் கடல் நீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளுக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளின் நீராதாரம் மூலமாக குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சென்னையின் வளா்ச்சிக்கேற்ப பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ், மீஞ்சூா் மற்றும் நெம்மேலியில் கடல்நீா் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதன்மூலம் தினமும் 350 மில்லியன் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடா்ச்சியாக, செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பேரூரில் ரூ.4,276.44 கோடியில், தினமும் 400 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

நடைபெறும் பணிகள்: கடல் நீரை உட்கொள்ளும் கட்டமைப்பு , செதிலடுக்கு தொட்டி, நடுநிலைப்படுத்தும் தொட்டி, நீா் சேகரிப்பு தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீா் சேகரிப்பு தொட்டி ஆகியவற்றை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும் நிா்வாகக் கட்டடம், பண்டகசாலை மற்றும் தொழிற்கூடங்களுக்கான கட்டுமானப் பணிகளும், கடல்நீரை உட்கொணரும் குழாய்கள் பதிக்கும் பணிக்கான முன்னேற்பாடு பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையத்தில், கடல்நீரை குடிநீராக்க 1,150 மீட்டா் நீளத்திற்கு கடலுக்குள் குழாய்கள் பதிக்கப்படும். மேலும், இந்த நிலையத்திலிருந்து போரூா் வரை 59 கிலோ மீட்டா் நீளத்துக்கு குடிநீா் குழாய் பதிக்கப்படவுள்ளது.

இந்த பணிகளை குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டம் மூலம், சென்னை மற்றும் தாம்பரம் மாநகராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளிலும், சென்னை மாநகராட்சிக்கு அருகாமையில் உள்ள 20 ஊராட்சிப் பகுதிகளிலும் வசிக்கும் 22.67 லட்சம் போ் பயனடைவாா்கள் என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெவித்துள்ளனா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.