உக்ரைன் மீதான போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்: சுவிஸ் அமைச்சர் வலியுறுத்தல்
அணு ஆயுதப் போர் வெடிக்கும் அபாயமும், மூன்றாம் உலகப்போர் மூழும் அபாயமும் நிலவிவரும் நிலையில், உலக நாடுகள் பல உக்ரைன் ரஷ்ய போர் குறித்து கவலை தெரிவித்துவருகின்றன.
சுவிஸ் அமைச்சர் வலியுறுத்தல்
இந்நிலையில், உக்ரைன் மீதான போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் ஒப்பந்தத்தை மீறி துவக்கப்பட்ட ரஷ்ய உக்ரைன் போர் துவங்கி 1,000 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், ஆயுதங்கள் அமைதியாக்கப்படவேண்டும் என்று கூறியுள்ள சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சரான Ignazio Cassis, மாஸ்கோ உக்ரைனுக்கெதிரான தனது போரை முடித்துக்கொள்ளவேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார்.
ரஷ்ய உக்ரைன் போரால் அணு ஆயுத அச்சுறுத்தல் உருவாகியுள்ளது மட்டுமல்லாமல், உலக அளவில் உணவு மற்றும் ஆற்றல் பாதுகாப்புக்கும் ஆபத்து உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார் அவர்.
குளிர்காலம் நெருங்கிவரும் நிலையில், உக்ரைனுடைய ஆற்றல் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவருவது குறித்து கவலை தெரிவித்த Ignazio Cassis, அதனால் பொதுமக்கள் குளிரால் அவதியுறும் பெரும் ஆபத்து ஏற்படுவது குறித்தும் கவலை தெரிவித்துள்ளார்.
அத்துடன், உக்ரைனுக்கு எதிராக வடகொரிய வீரர்கள் களமிறங்கியுள்ளதால் போர் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது குறித்து விமர்சித்த Ignazio Cassis, உக்ரைனுடைய இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கும் மதிப்பளிக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார்.