அணு ஆயுதப் போர் அபாயம்… ரஷ்ய மக்களின் பாதுகாப்புக்காக புடின் துவங்கியுள்ள நடவடிக்கை
ரஷ்யா – உக்ரைன் போரில், அமெரிக்க ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யாவைத் தாக்க உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து போர் தீவிரமடைந்துள்ளது.
ஆகவே, மூன்றாம் உலகப்போர் வெடிக்கலாம் என்ற அச்சத்திலும், அணு ஆயுத தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்திலும், பல நாடுகள் தத்தம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், ரஷ்யாவும், தனது மக்களுக்காக பாதுகாப்பு நடவடிக்கைகளைத் துவங்கியுள்ள விடயம் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
ரஷ்ய மக்களின் பாதுகாப்புக்காக நடவடிக்கை
மோதல் உச்சத்தை எட்டக்கூடும், அணு ஆயுதங்கள் பிரயோகிக்கப்படலாம் என்னும் அச்சம் எழுந்துள்ளதைத் தொடர்ந்து, புடின் தனது மக்களுக்காக ‘mobile nuclear bunkers’ என்னும் நடமாடும் பாதுகாப்புப் பேழைகளை பெரிய அளவில் உருவாக்கிவருகிறார்.
அணு ஆயுதம் பிரயோகிக்கப்படும் நிலையில், இந்த பாதுகாப்புப் பேழைகள் மக்களை கதிரியக்கத்திலிருந்து பாதுகாக்கும்.
300,000 பவுண்டுகள் செலவில் கட்டப்பட்டுவரும் இந்த பாதுகாப்புப் பேழைகளில் 54 பேர் தங்கலாம். தேவை அதிகரிக்கும் பட்சத்தில், 150 பேர் தங்கும் வகையில் அதை மாற்றியும் அமைக்கலாம்.
இந்த பாதுகாப்புப் பேழைகளை வேறு இடங்களுக்கும் தூக்கிச் செல்லலாம் என்பது கூடுதல் வசதி.
அணுக்கதிர் வீச்சிலிருந்து மட்டுமின்றி, குண்டு வெடிப்பால் ஏற்படும் அதிர்வலைகள், குண்டுவெடிப்பில் வெடித்துச் சிதறும் குண்டுகளின் துகள்கள், இடிந்து விழும் கட்டிடங்கள், நச்சுவாயு, ரசாயனங்கள் என பலவகையான ஆபத்துக்களிலிருந்து இந்த பாதுகாப்புப் பேழைகள் மக்களை பாதுகாக்கும் என நம்பப்படுகிறது.
விடயம் என்னவென்றால், இவை இதுவரை பயன்படுத்தப்பட்டதில்லை. துரதிர்ஷ்டவசமாக ஒரு பெரிய போர் வெடித்தால் மட்டுமே, உண்மையாகவே இவை எந்த அளவுக்கு மக்களை பாதுகாக்கும் என்பது தெரியவரும்.
அவ்வகையில், போர் வெடிக்காமலே இருக்குமானால், அனைவருக்கும் மகிழ்ச்சியே!