அதிகரிக்கும் மூன்றாம் உலகப்போர் அச்சம்… தன் குடிமக்களை எச்சரித்துள்ள ஐரோப்பாவின் ஏழாவது பெரிய நாடு
புடின் அணு ஆயுத அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், பல நாடுகள் போரை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு தங்கள் குடிமக்களை எச்சரித்துவருகின்றன.
தன் குடிமக்களை எச்சரித்துள்ள மற்றொரு ஐரோப்பிய நாடு
மூன்றாம் உலகப்போர் அச்சம் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, உணவுப்பொருட்கள் மற்றும் தண்ணீரை சேமித்துவைக்குமாறு ஸ்வீடன் நாடு தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ள விடயம் பரபரப்பை உருவாக்கியது.
அதைத் தொடர்ந்து, பின்லாந்து, நோர்வே, டென்மார்க் முதலான நாடுகளும் தத்தம் மக்களை எச்சரித்துள்ளன.
இந்நிலையில், ஐரோப்பாவின் ஏழாவது பெரிய நாடான ஜேர்மனியும், ரஷ்யாவுடன் மூன்றாம் உலகப்போர் உருவாகலாம் என்றும், அதற்காக தங்களைத் தயார் செய்யுமாறும் தன் குடிமக்களை எச்சரித்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் தங்கள் ஆயுதங்களைக் கொண்டு ரஷ்யாவுக்குள் தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அனுமதியளித்தால், அது நேட்டோ நாடுகள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் போரில் இறங்கியுள்ளதாக கருதப்படும் என ஏற்கனவே புடின் எச்சரித்துள்ளார்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், அமெரிக்க ஏவுகணைகளை ரஷ்யாவுக்குள் பிரயோகிக்க அமெரிக்கா உக்ரைனுக்கு அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து, ரஷ்யாவிலுள்ள Bryansk பகுதியில் அமைந்துள்ள சேமிப்பகம் ஒன்றின் மீது உக்ரைன் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக மாஸ்கோ தெரிவித்துள்ளதால், பதற்றம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.