;
Athirady Tamil News

“ஆசிரியை கொலை செய்யப்பட்டது மிகவும் மிருகத்தனமானது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

0

பள்ளி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிருகத்தனமானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் அரசு பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரமணி என்பவர் தற்காலிக ஆசிரியையாகப் பணியாற்றி வந்தார். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடம் எடுக்கும் அவர் காலை 10.10 மணிக்கு பாடவேளை இல்லாததால் ஓய்வில் இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த சின்னமனையைச் சேர்ந்த மதன் என்பவருடன் ஓய்வறையின் வராண்டாவில் நின்றபடி பேசியுள்ளார். திடீரென ரமணியின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் மதன் கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. அதில் ரமணி அலறித் துடித்த நிலையில் மதன் தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.

அப்போது அங்கே இருந்த ஆசிரியர்கள் மதனை விரட்டிப் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். படுகாயமடைந்த ரமணி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்த நிலையில், பள்ளி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிருகத்தனமானது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வழக்கின் விசாரணை தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு குற்றவாளிக்கு விரைவில் சட்டப்படி தண்டனை பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

மேலும் ரமணியின் குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டிருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

அதேபோல், கிராமப்புறப் பகுதியில் கல்விப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ரமணியின் உயிரிழப்பு பள்ளிக் கல்வித் துறைக்கும், சக ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.