அதானி எதிராக அமெரிக்காவில் வழக்கு.. காங்கிரஸ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் பாஜக
இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீடுகளை ஈர்த்து மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் கௌதம் அதானி மீது வழக்குத் தொடரப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சி மீது பாஜக குற்றம்சாட்டியிருக்கிறது.
இந்திய மாநில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து மோசடி செய்ததாக தொழிலதிபர் கெளதம் அதானி மீது வழக்குப் பதிவு செய்திருக்கும் காலகட்டத்தில், வழக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணிக் கட்சியே ஆட்சியில் இருந்திருக்கிறது என்றும் பாஜக சுட்டிக்காட்டியிருக்கிறது.
பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் அமித் மால்வியா இது குறித்துப் பேசுகையில், இந்த மேம்பாட்டுத் திட்டப் பணிகள் நடந்த காலக்கட்டம் குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்தியாவில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பும், அமெரிக்காவில், புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் முன்பும் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருப்பது, அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கும் என்பதை காட்டுவதாக உள்ளது. இது பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அமெரிக்க ஃபெடரல் நீதிமன்றத்தில் பதியப்பட்டிருக்கும் வழக்கில், ஒடிசா, தமிழ்நாடு, சத்தீஸ்கர், ஆந்திர மாநிலங்களில் பணியாற்றிய அரசு அதிகாரிகளுக்கு, சூரிய ஒளி விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் கிடைக்க, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை முதல் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அதானி குழுமம் லஞ்சம் கொடுத்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து மாநிலங்களிலும், குறிப்பிட்ட ஆண்டில், காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணிக் கட்சியே ஆளுங்கட்சியாக இருந்துள்ளது என்று ஜெய்ராம் ரமேஷூக்கு அமித் மால்வியா பதிலளித்துள்ளார். எனவே, குற்றம்சாட்டுவதற்கு முன்பு, காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்தக் குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
குறிப்பிட்ட காலக்கட்டத்தில் ஒடிசாவில் பிஜு ஜனதா தளமும், ஆந்திரத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், தமிழ்நாட்டில் காங்கிரஸ் கூட்டணியில் திமுகவும் ஆட்சியில் இருந்தது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது என்று மால்வியா குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேலும், ரமேஷ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமித் மால்வியா, எப்போதும், ஒரு விவகாரத்தில் எதிர்வினையாற்றுவதற்கு முன்பு, விவகாரத்தை முழுமையாக படித்துவிட வேண்டும், அதுபோலவே, அமெரிக்க நீதிமன்றத்தில் பதியப்பட்ட வழக்கு ஆவணங்களை முழுமையாக மூத்த காங்கிரஸ் தலைவர் படித்திருக்க வேண்டும், குற்றம் நிரூபிக்கப்படும்வரை, குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள்தான் என்றும் பதிலளித்துள்ளார்.
கடந்த 2020 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததை மறைத்து அமெரிக்காவிடம் முதலீடுகளை பெற்றதாக நியூயார்க் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லஞ்சம் தொடர்பான தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் முதலீடுகளை திரட்டியிருப்பதாகவும், அதானியின் செயல் சட்டப்படி தவறானது என வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க பங்கு பரிவர்த்தனை ஆணையமும் கௌதம் அதானி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
அதானி உள்ளிட்ட 6 பேர் மீது குற்றச்சாட்டு
சூரிய ஒளி மின்சாரம் விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு 26 கோடி டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2,100 கோடியை லஞ்சமாக அதானி கொடுக்க முன்வந்துள்ளார்.
இந்த தகவல்களை மறைத்து, அமெரிக்காவில் இருந்து முதலீடுகளைப் பெற்று முறைகேட்டில் ஈடுபட்டதாக நியூயார்க் நீதிமன்றத்தில் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புகாரில், 2020 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் ஜூலை 2021 மற்றும் பிப்ரவரி 2022 இடையேயான காலகட்டத்தில், ஒடிஸா, தமிழ்நாடு, ஜம்மு – காஷ்மீர், சத்தீஸ்கர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் மின் விநியோக ஒப்பந்தங்களை அதானி குழுமம் பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.