பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை… மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக கூட்டணி!
மகாராஷ்ட்ரா சட்டமன்றத் தேர்தலில், பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கும் பாஜக கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
288 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்ட்ராவில் கடந்த 20 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், பாஜக, சிவேசனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் மகாயுதி கூட்டணி, காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகா விகாஸ் அகாதி கூட்டணி நேரடியாக மோதின.
இந்நிலையில், தேர்தலில் பதிவான சுமார் 66 சதவிகித வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவைப்படும் நிலையில், ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மகாயுதி கூட்டணி, 223 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம், மகா விகாஸ் கூட்டணி 59 இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று தோல்வியின் பாதையில் பயணிக்கிறது.
எனவே, மகாராஷ்ட்ராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதியான நிலையில், முதலமைச்சர் யார் என்பதே தற்போதைய கேள்வியாக எழுந்துள்ளது. மகாயுதி கூட்டணியில் அதிகபட்சமாக பாஜக 133 இடங்களில் முன்னிலை வகிப்பதால், தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்றும் கருதப்படுகிறது.