வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் பதவி மீள பெறப்பட்டுள்ளது
வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர் எம்.ஜெகூவின் பதவி,உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் மீளப்பெறப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழ் உள்ள நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மன்னார் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்த தொழிலாளி ஒருவருக்கும் பொறியியலாளருக்கும் இடையில் நீண்டகாலமாக ஏற்பட்டுவந்திருந்த முரண்பாடு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைகலப்பில் முடிவடைந்தது.
இது தொடர்பில் நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவந்த நிலையில் குறித்த தொழிலாளி மற்றும் பொறியியலாளருக்கு திணைக்களமட்ட விசாரணை முடியும்வரை அமைச்சின் செயலாளரினால் தற்காலிக இடமாற்றங்கள் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தனது இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி குறித்த தொழிலாளி மன்னார் நீதிமன்றில் வழக்கு ஒன்றினைத் தாக்கல் செய்ததோடு வடக்கு மாகாண ஆளுநரிடத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த பின்னணிகளின் மத்தியிலையே , வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலர் எம்.ஜெகூவின் பதவி, வடக்கு மாகாண ஆளுநரால் மீளப்பெறப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.