வெளிநாட்டில் மாயமான இஸ்ரேலிய மத குரு சடலமாக மீட்பு… படுகொலை என நெதன்யாகு
ஐக்கிய அரபு அமீரகத்தில் மாயமான இஸ்ரேலிய மத குரு தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், இது படுகொலையாக இருக்கலாம் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதி செய்துள்ளார்.
கொந்தளித்த நெதன்யாகு
இது ஒரு கொடூரமான யூத எதிர்ப்பு பயங்கரவாத சம்பவம் என கொந்தளித்துள்ள நெதன்யாகு, இதற்கு பொறுப்பான எவரையும் கண்டுபிடித்து நீதிக்கு முன் நிறுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
இஸ்ரேலிய-மால்டோவன் குடிமகனான Zvi Kogan வியாழக்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் வைத்து மாயமானார். அவர் காணாமல் போனதாக தகவல் கிடைத்ததும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாத் விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரை முறையாக அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. புதன்கிழமை முதல் அவரிடமிருந்து தகவல் எதுவும் இல்லை என்றே கோகனின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இஸ்ரேலை ஒரு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் ஒப்புக்கொண்டதன் பின்னர், 2020 முதல் கோகன் அபுதாபியில் பணியாற்றி வந்துள்ளார். தற்போது அவரது இறப்பை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,
தீவிரவாத நடவடிக்கை
அவரது மரணத்திற்கு காரணமான குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க இஸ்ரேல் அரசு அனைத்து வழிகளிலும் செயல்படும் என்றார். இந்த விவகாரம் தொடர்பில் மொசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோகனின் மரணம் ஒரு தீவிரவாத நடவடிக்கை என குறிப்பிட்டிருந்தது.
அத்துடன் தீவிர விசாரணையும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளனர். மட்டுமின்றி, தேவை இருந்தால் மட்டுமே ஐக்கிய அமீரகத்திற்கு பயணப்பட வேண்டும் என ஏற்கனவே இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்திருந்தது.