அரை நூற்றாண்டுக்கு முன் செய்த தவறு., பழங்குடியின மக்களிடம் மன்னிப்பு கேட்ட கனடா அரசு
அரை நூற்றாண்டுக்கு முன் செய்த தவறுக்காக பழங்குடியின மக்களிடம் கனடா அரசு மன்னிப்பு கேட்டுள்ளது.
கனடா அரசு, சுமார் அரை நூற்றாண்டுக்கு முன் நுனாவிக் (Nunavik) எனும் பழங்குடியின மக்களின் முக்கிய சொத்தாக கருதப்பட்ட சறுக்குவண்டி (sled) நாய்களை கொன்றதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது.
கிரவுன்-பழங்குடியின உறவுகள் அமைச்சர், இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree), குயூபெக் மாநிலத்தின் வட பகுதியான நுனாவிக் பகுதியில் உள்ள பழங்குடியின மக்களிடம் சனிக்கிழமை இந்த மன்னிப்பை அறிவித்தார்.
குடும்பத்தில் ஒரு உறுப்பினராகவும் தோழர்களாகவும் இருந்த நாய்களை இழந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக அவர் கூறினார்.
அந்தச் செயலின் தீவிரமான விளைவுகளை புரிந்துகொள்ளாத அரசின் செயல்பாடு, மக்கள் வாழ்க்கையில் பேரழிவை ஏற்படுத்தியது என அவர் வருத்தம் தெரிவித்தார்.
2010-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின் படி, 1,000-க்கும் மேற்பட்ட sled நாய்கள், அவர்களது உரிமையாளர்களின் மனவேதனை மற்றும் சமூகத்தின் தேவைகளைப் பொருட்படுத்தாமல் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
நாய்களின் முக்கியத்துவம்
நுனாவிக் பழங்குடியின சமுதாயம் முழுவதும் sled நாய்களை பாரிய அளவில் நம்பி வாழ்ந்துவந்தது.
அவை வேட்டை, மீன்பிடி, மற்றும் பிற வாழ்வாதார நடவடிக்கைகளுக்குப் பயன்பட்டதுடன், போக்குவரத்துக்கும் முக்கியமாக இருந்தன.
இழப்பீடு
இந்த சோகமான சம்பவம் தொடர்பாக, கனடா அரசு மன்னிப்புடன் சேர்த்து, 45 மில்லியன் கனேடிய டொலர் ( இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.937 கோடி) இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
முன்னதாக 2019-ஆம் ஆண்டில், நுனாவிக் இன மக்கள் மீது நடந்த இத்தகைய சம்பவம் தொடர்பாகவும் கனடா அரசு மன்னிப்பு தெரிவித்தது.
இந்த மன்னிப்புகள் பழங்குடியின மக்களின் வரலாற்று நேர்மையையும் உரிமைகளையும் புரிந்துகொள்வதில் முன்னேற்றத்தை குறிக்கின்றன.