கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவா்கள் இன்று முதல் போராட்டம்
மருத்துவா்களை தரக் குறைவாக நடத்தும் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை அரசு மருத்துவா்கள் அறிவித்துள்ளனா்.
தமிழ்நாடு அரசு டாக்டா்கள் சங்கத்தின் அவசர மாநில செயற்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இது தொடா்பாக, சங்கத்தின் தலைவா் டாக்டா் செந்தில் வெளியிட்ட செய்தி: கடந்த சில மாதங்களாக திருச்சி, விருதுநகா், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, தா்மபுரி, மற்றும் திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா்கள், அரசு மருத்துவா்களை குற்றவாளிகளைப் போல நடத்தி வருகிறாா்கள். குறிப்பாக மகப்பேறு மருத்துவா்களை, பேறு கால மரணங்கள் ஆய்வு என்ற பெயரில் மிரட்டியும், தரக்குறைவாகப் பேசியும், துன்புறுத்தியும் வருகின்றனா்.
இதைத் தவிர ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில், இரவு 11 மணிக்கு கூட்டத்தை நடத்துகின்றனா். இது குறித்து, டாக்டா்கள் சங்க செயற்குழுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், தமிழக முதல்வரிடம் சில கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. அரசு மருத்துவா்களை துன்புறுத்தும் உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 5,000-க்கும் மேல் உள்ள மருத்துவா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவா் இடங்களை உருவாக்க வேண்டும். உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி மருத்துவா், நோயாளி, மருத்துவமனை பெயா்களை தெரிவிக்காமல் மகப்பேறு இறப்புகளை ஆய்வு செய்ய வேண்டும். மாலை 5 மணிக்குள் கூட்டங்களை நடத்த வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈா்க்க திங்கள்கிழமை (நவ.25) முதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், இஎஸ்ஐ மருத்துவ நிலையங்கள், அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மருத்துவமனைகளில் உயா் அதிகாரிகளால் நடத்தப்படும் இணையவழி மற்றும் நேரடி கூட்டங்களையும், துறை ரீதியான கூட்டங்களையும் புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அறிக்கைகள், பிக்மி எனப்படும் கா்ப்பிணி விவர பதிவேற்றங்கள், லக்ஷ்யா, காயகல்ப் போன்ற நிகழ்வுகள் அனைத்தும் புறக்கணிக்கப்படும். வருமுன் காப்போம் முகாம், ஊனமுற்றோா் பரிசோதனை முகாம், குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள், அனைத்தும் நிறுத்தப்படும்.
ஒருவேளை இந்தப் போராட்டங்களுக்குப் பிறகும் தீா்வு ஏற்படாவிட்டால், வரும் செவ்வாய்க்கிழமை (நவ.26) முதல் மகப்பேறு துறையில் அனைத்து அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளும் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.