அதானி குழுமத்தின் கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டம்: அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா
அதானி நிறுவனத்தின் (Adani Group) பங்காளித்துவத்தின் கீழ் இயங்கும் கொழும்பு (Colombo) துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் அபிவிருத்தித் திட்டத்திற்காக வழங்க எதிர்பார்க்கும் 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை மீள் மதிப்பீடு செய்யவுள்ளதாக அமெரிக்க சர்வதேச நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதானி நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் கவுதம் அதானி மீதான குற்றச்சாட்டுகள் அதில் ஏதேனும் விளைவை ஏற்படுத்துமா என்பதை அமெரிக்க சட்டமா அதிபர் திணைக்களம் பரிசீலிக்க உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில், அதானி, இந்திய அரசு அதிகாரிகளுக்கு தங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய திட்டங்களைப் பெறுவதற்காக 265 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சம் கொடுத்ததாகவும், அதன் மூலம் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலாபம் ஈட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதிமன்றம்
இந்நிலையில், இலஞ்சம் கொடுத்து, ஏமாற்றி இலாபம் ஈட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டதுடன், அதானிக்கு சமீபத்தில் அமெரிக்க நீதிமன்றம் அழைப்பாணையும் பிறப்பித்துள்ளது.
இதேவேளை அதானியின் டொலர் பத்திரங்களின் மதிப்பும் வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. அதன்படி கடந்த வாரம் இரண்டு காலாண்டுகளில் அந்நிறுவனம் இழந்த சந்தை மதிப்பின் பெறுமதி 27.9 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
இந்தியாவின் அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை (WCT) அபிவிருத்தி செய்வதற்காக அதன் உள்ளூர் பங்குதாரர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் PLC மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையுடன் (SLPA) ஒரு பில்ட்-ஆபரேட்-டிரான்ஸ்பர் (BOT) ஒப்பந்தம் 2021ஆம் ஆண்டில் செப்டெம்பர் 30ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது.
இதனூடாக கொழும்பு துறைமுகத்தில் மேற்கு முனையத்தின் 51 சதவீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.