அதானி விவகாரத்தால் அமளி: முடங்கியது நாடாளுமன்றம்!
அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் புதன்கிழமை காலை வரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டின் அரசமைப்புச் சட்டம், அரசியல் நிா்ணய சபையால் ஏற்கப்பட்டதன் 75-ஆம் ஆண்டு தினத்தையொட்டி, பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இரு அவைகளின் சிறப்பு அமா்வு செவ்வாய்க்கிழமை (நவ.24) நடைபெறவுள்ளது.
இதனால், நாளை இரு அவைகளிலும் வழக்கமான அலுவல்கள் நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் அமளி
நாட்டில் 2020 – 2024 காலகட்டத்தில் சூரிய மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை மேற்கொள்ள சில மாநிலங்களின் அரசு அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலா் (சுமாா் ரூ.2,200 கோடி) லஞ்சம் கொடுத்ததாக தொழிலதிபா் கெளதம் அதானி உள்ளிட்டோா் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் அந்நாட்டு அரசுத் தரப்பில் சில தினங்களுக்கு முன்னா் குற்றம்சாட்டப்பட்டது.
இதனிடையே, நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில், அதானி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, புதன்கிழமை காலை 11 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவையின் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்த நிலையில், மக்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.
நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில், வஃக்ப் வாரிய மசோதா உள்பட 16 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், அதானி விவகாரம், மணிப்பூர் கலவரத்தை அரசுக்கு எதிராக கையில் எடுத்துள்ளது எதிர்க்கட்சிகள்.