;
Athirady Tamil News

முன்னாள் எம்.பியின் வாகனத்தை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் (Sujeewa Senasinghe) சர்ச்சைக்குரிய சொகுசு வாகனத்தை விடுவிக்குமாறு கோட்டை நீதவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறித்த SUV வாகனத்தை நாட்டிற்கு சட்டரீதியாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளதையும், வாகனத்தை இறக்குமதி செய்வதற்கான உரிய நடைமுறைகள் பின்பற்றப்பட்டதையும் அவதானித்த பின்னரே நீதவான், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கை
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்து, எஸ்யூவியை அதன் அசல் உரிமையாளரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா வரியில்லா வாகனமாக நாட்டிற்குக் கொண்டு வந்ததாக நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

அதன் பின்னர் ஸ்ரீரங்கா பயன்படுத்திய இந்த வாகனம், தற்போதைய உரிமையாளர் சுஜீவ சேனசிங்கவுக்கு விற்கப்படுவதற்கு முன்னர் செட்டிகுளத்தில் விபத்துக்குள்ளானதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் விசாரணைகளின் முடிவின்படி, தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த வாகனத்தை 100 மில்லியன் ரூபாய் ஒப்பந்த அடிப்படையில் சுஜீவ சேனசிங்கவிடம் கையளிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் வழக்கு 2025 பெப்ரவரி 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

முன்னதாக, 2024 நவம்பர் 11 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை காவலில் எடுத்து, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கையைப் பெற்றுக்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.