லெபனானில் ஹிஸ்புல்லா படைகளுடன் போர் நிறுத்தம்… இறுதியில் ஒப்புக்கொண்ட இஸ்ரேல்
லெபனானில் இருந்து செயல்படும் ஹிஸ்புல்லா படைகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிஸ்புல்லா படைகளுடன்
பேஜர் தாக்குதல்களாலும், அதன் தலைவர்கள் பலரை படுகொலை செய்த பிறகு ஹிஸ்புல்லா படைகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் தயாராகியுள்ளது.
அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த துப்பாக்கிச் சூடில் பலர் கொல்லப்பட்ட நிலையில், காஸா மீது போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், கொடூரமான தாக்குதல்களை முன்னெடுத்தது.
இதன் தொடர்ச்சியாக செப்டம்பர் மாதம் லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்த்து. இந்த நிலையில் தற்போது பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது பரிந்துரையுடன் இஸ்ரேல் அமைச்சரவையின் முன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வரப்போவதாக அறிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கில் உள்ள இஸ்ரேலியக் குடிமக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பும் அளவுக்கு ஹிஸ்புல்லாவை இஸ்ரேல் முடக்கியதாக நெதன்யாகு அறிவித்தார். மேலும், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவைக் கொன்றதன் மூலம் பாம்பின் தலையைத் துண்டித்ததாக குறிப்பிட்ட நெதன்யாகு,
லெபனான் எதிரியை பத்தாண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளியதாக தெரிவித்துள்ளார். அக்டோபர் 8ம் திகதியில் இருந்து ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் துவங்கியது என குறிப்பிட்ட நெதன்யாகு, ஓராண்டு கடந்துவிட்டது, அப்போதிருந்த ஹிஸ்புல்லா படைகள் அல்ல இப்போது என்றார்.
மேலும், அந்த அமைப்பின் அனைத்து மூத்த உறுப்பினர்களையும் அழித்தோம், அதன் பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை அழித்தோம், ஆயிரக்கணக்கான அவர்களின் வீரர்களை அழித்தோம்.
இஸ்ரேல் ராணுவத்தின்
மேலும் நமது எல்லைக்கு அருகில் உள்ள நிலத்தடி மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை அழித்தோம் என்றார். ஆனால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் மீண்டும் ஹிஸ்புல்லாவை தாக்குவேன் என்றும் நெதன்யாகு சபதம் செய்தார்.
வெளியான தகவலின் அடிப்படையில், தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய துருப்புக்கள் திரும்பப் பெறுவதுடன், தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு லெபனானின் இராணுவத்தை அனுப்பவும் இந்த ஒப்பந்தம் பரிந்துரைக்கிறது.
மட்டுமின்றி, இஸ்ரேலின் எல்லையில் இருந்து 20 மைல் தொலைவில் லெபனானின் லிட்டானி ஆற்றுக்கு தெற்கே ஹிஸ்புல்லா தங்களது இருப்பை குறைக்க வேண்டும். இந்த ஒப்பந்தமானது ஹிஸ்புல்லா படைகளுடன் மட்டுமே என்றும், ஹமாஸ் படைகளுடன் போர் நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேலும், ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரைத் தொடரவும், காஸாவில் இருக்கும் பணயக்கைதிகளை மீட்டெடுக்கவும் நெதன்யாகு சபதம் செய்துள்ளார்.