அராலியில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு
மாவீரர்களை பெற்றெடுத்த பெற்றோர்களை கெளரவப்படுத்தும் நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை அராலி சிறீமுருகன் சனசமூக நிலையத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில், தமது இன்னுயிர்களை தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மூன்று பிள்ளைகளை மண்ணுக்காக கொடுத்த குணராசா கமலாதேவி பொதுச் சுடரினை ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து ஏனையோர் ஈகைச்சுடர்களை ஏற்றி வைத்தனர். பின்னர் உயிர்நீத்த உறவுகளது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோருக்கு நினைவுச் சின்னமாக தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இறுதியாக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70வது பிறந்தநாளானது கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், தமிழரசுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் சேனாதிராஜா கலையமுதன், மாவீரர்களின் பெற்றோர், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.