30 மீற்றர் ஆழத்தில் அமெரிக்க அணு ஆயுத ராணுவ முகாம்., பனிக்கட்டிக்கு அடியில் உறங்கும் பேராபத்து
கிரீன்லாந்தில் பனிக்கட்டிக்கு அடியில் 30 மீற்றர் ஆழத்தில் மறைந்திருந்த அணு ஆயுத ராணுவ முகாமை நாசாவின் விஞ்ஞானி சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார்.
இது, பனிப்போர் காலத்தில் அமெரிக்கா உருவாக்கிய மறைமுக அணு திட்டத்தின் முக்கிய பகுதியான ‘Camp Century’ என்ற பல மைல்கள் கொண்ட சுரங்க முகாம்.
நாசாவின் ஜெட் புரோபல்ஷன் ஆய்வகத்திலுள்ள சாட் கிரீன் தலைமையிலான குழு, கிரீன்லாந்து ஐஸ் படலத்தின் மேல் விமான ரேடார்களை பயன்படுத்தி ஆய்வு செய்யும் போது இந்த மறைமுக அணு முகாமைத் கண்டுபிடித்துள்ளது.
இந்த முகாம், சோவியத் ஒன்றியத்துடன் போரின் போது அணு ஏவுகணைகளை பாதுகாப்பாகச் சேமித்து வைக்க உருவாக்கப்பட்டது.
கேம்ப் செஞ்சுரியின் சரித்திரம்
1959 முதல் 1967 வரை செயல்பட்ட இந்த முகாம், 21 சுரங்கங்கள் கொண்டது மற்றும் 9800 அடி நீளத்தில் அமைந்திருந்தது.
அணு உலையால் இயக்கப்படும் இந்த முகாம், பின்னர் ஐஸ் மாற்றங்கள் காரணமாக பாதுகாப்பற்றதாக மாறியது. முகாமின் முடிவுகளை சந்தித்து, அணு ஏவுகணைகளை அங்கு சேமிப்பது செயல்படாது என உளவுத்துறை கண்டறிந்தது.
கண்டுபிடிப்பு மற்றும் பிரச்சனைகள்
கேம்ப் செஞ்சுரியின் மறைமுக பயன்பாடு 1997ல் உறுதிப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் முகாமின் இடிபாடுகள் மற்றும் அணு மாசுபாட்டு சவால்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன.
நாசா அண்மையில் ‘Uninhabited Aerial Vehicle Synthetic Aperture Radar’ மூலம் இதன் 3D மாடலை உருவாக்கியுள்ளது.
வளிமண்டல மாற்றங்கள் மற்றும் ஐஸ் படலங்கள் உருகும் போது, இந்த முகாமும் அதனுடன் உள்ள அபாயகரமான கழிவுகளும் மீண்டும் வெளிப்படும் வாய்ப்பு குறித்து விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.