வயநாடு எம்.பி. பிரியங்கா அணிந்திருந்த கசவு புடவையின் ஆச்சரியம் தரும் பின்னணி!
கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வதேரா, இன்று நாடாளுமன்றத்தில் மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக்கொண்டார்.
கேரள மாநில பாரம்பரிய உடையில் வந்து பிரியங்கா பதவியேற்றுக்கொண்டது, நிச்சயம் வயநாடு மக்களை மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்திய மக்களின் கவனத்தையும் ஈர்த்திருக்கும்.
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா முன்னிலையில், நாடாளுமன்றத்தில் இன்று மக்களவை உறுப்பினராக பிரியங்கா காந்தி (52) பதவியேற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரியங்காவின் தாய் சோனியா, சகோதரர் ராகுல், கணவர் ராபர்ட் வதேரா மற்றும் அவர்களது பிள்ளைகள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்யே ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
நாம் சொல்லும் ஓணம் புடவை, கேரள புடவை, மலையாள புடவை என எல்லாவற்றுக்கும் ஒரே அர்த்தம்தான். அதுதான் கசவு புடவை.
நாம் கேரள புடவை என்று அழைத்தாலும், உண்மையில் இதன் பெயர் கசவு புடவை. கசவு புடவை என்றால் வெள்ளை அல்லது பழுப்பு நிறப் பருத்திப் புடவையில் ஜரிகை பார்டர் வைத்திருக்கும். உண்மையில், இந்த புடவையில் இருக்கும் ஜரிகைதான் கசவு என்றழைக்கப்படுகிறதாம்.
முன்பெல்லாம் பார்டர் நெய்யப் பயன்படுத்தப்படும் கசவு நூல்கள் தங்கத்தினால் செய்யப்படும். ஓணத்தின்போது இந்த கசவு புடவையை அணிவதன் மூலம் செழிப்பு, வளர்ச்சி போன்றவற்றைக் குடும்பத்தில் ஏற்படும் என்பது நம்பிக்கை.
ஆனால், தங்கம் விலை ஏற ஏற அதில் செப்பு சேர்ந்து தற்போது வெறும் தங்க நிற ஜரிகைகளைக் கொண்டும் கசவு புடவைகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், எத்தனை கலப்புகள் இருந்தாலும் இந்தப் புடவையின் அழகு மட்டும் குறையவில்லை.
உண்மையான தங்க ஜரிகையில் இன்னமும் கேரளத்தின் சேந்தமங்கலம், குத்தாம்புள்ளி, பாலராமபுரம் பகுதிகளில் இப்புடவை தயாரிக்கப்படுகிறதாம். இந்த புடவைக்காக, இப்பகுதிகளுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.