50 ரூபாவினால் எரிபொருள் விலையை குறைக்க அரசிடம் கோரிக்கை
எதிர்வரும் எரிபொருள் விலை திருத்தத்தின் போது எரிபொருளின் விலையை 50 ரூபாவினால் குறைக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று (28.11.2024) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாளை மறுதினம் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட உள்ளதாகவும் எரிபொருள் விலையை குறைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
எரிபொருள் விலை குறைப்பு
அத்துடன், தேசிய மக்கள் சக்தி எரிபொருள் விலை குறைப்பு குறித்து தேர்தல் மேடைகளில் செய்த பிரசாரம் மெய்ப்பிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மக்களைப் பற்றி பேசுவதற்காகவே தம்மை மக்கள் நாடாளுமன்றிற்கு தெரிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லீட்டர் ஒன்றின் விலை
இதேவேளை எரிபொருள் விலை திருத்தத்தின் படி கடந்த நவம்பர் மாதம் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, 319 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 313 ரூபாவாகும். ஒக்டேன் 95 பெட்ரோலின் விலை 6 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 371 ரூபாவாகும்.
இதேவேளை, ஒக்டேன் 92 பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலையில் எவ்வித மாற்றமுமில்லை. மேலும், மண்ணெண்ணெய்யின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை