இன்றும் நாளையும் தீவிரமடையும் கனமழை.., எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்
சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் அதி தீவிர மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தீவிரமடையும் கனமழை
வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரமடைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
மேலும், இது மணிக்கு 9 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 7 கிமீ ஆக குறைந்துள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக டெல்டா மாவட்டங்கள்,சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை நிலவரம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “சென்னையில் இன்றும் நாளையும் அதி தீவிர மழைக்கு வாய்ப்புள்ளது. தற்போது தொடங்கும் மழை, நண்பகல், மாலை மற்றும் இரவு நேரங்களில் படிபடியாக தீவிரமடையும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்கள் முதல் மரக்காணம் வரை கடற்கரைப் பகுதிகளில் 29 -ம் திகதி தொடங்கி 30 -ம் திகதி வரை மிக மிக கனமழை பெய்யும்” என்று கூறியுள்ளார்.