தேடுதல் பணி மீண்டும் ஆரம்பம்!
அம்பாறை காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் தொடர்பில் 7 பேர்களின் ஜனாஸாக்கள் மீட்கப்பட்ட நிலையில் இடை நிறுத்தப்பட்ட மீட்புப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை(28) மாலை தேடுதல் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.இருள் சூழ்ந்த நிலை மற்றும் அதிகமான காற்று என்பவற்றால் காணாமல் போன மாணவர்களை தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மீண்டும் இன்று காலை மீட்புப் பணிகள் ஆரம்பமாகி உள்ளது.
காணாமல் சென்ற ஒரு மத்ரஸா மாணவனின் சடலத்தை தேடி குறித்த மீட்புப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன.அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரத்தின் ஊடாக சம்மாந்துறை பிரதேசத்திற்கு விடுமுறைக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா மாணவர்கள் உள்ளிட்ட பலர் வௌ்ளத்தில் சிக்கி கடந்த செவ்வாய்க்கிழமை (26) மாலை காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கல்முனை அம்பாறை பிரதான வீதியில் நீர்மட்டம் குறைந்து இருந்தால் மாத்திரம் வழமை போன்று அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதி அளிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் இத்தேடுதலில் மேலதிகமாக கடற்படை இராணுவம் விசேட அதிரடிப்படை பொலிஸார் பங்கேற்றுள்ளதுடன் சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை, மாளிகைகாடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மற்றும் காரைதீவு தமிழ் இளைஞர்கள் அமைப்பு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களும் சடலம் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.