பலஸ்தீனத்தின் அழிவுகளை ஏற்க முடியாது: ஜனாதிபதி கண்டனம்!
பலஸ்தீன (Palestine) பிரதேசங்களிலும் மேற்கு ஆசியா முழுவதிலும் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் பாரியளவிலான பொதுமக்களின் உயிர் இழப்புகள், துன்பங்கள் மற்றும் தொடர்ச்சியான அழிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது மற்றும் சகிக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
பலஸ்தீன மக்களுடனான ஐக்கிய நாடுகளின் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, பலஸ்தீன மக்களுக்கு இலங்கையின் உறுதியான ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஜனாதிபதி, காசாவின் மோசமான மனிதாபிமான நிலைமை குறித்து இலங்கை தொடர்ச்சியாக கடுமையான அதிருப்திகளை தெரிவித்துள்ளதுடன், உடனடி போர்நிறுத்தத்திற்கான அழைப்பையும் ஆதரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பலஸ்தீனியர்களின் போராட்டம்
பலஸ்தீனியர்களின் போராட்டம், சர்வதேச சட்டம் மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகியவற்றில் உறுதியாக நிலைநிறுத்தப்பட்ட அமைதியான மற்றும் சமத்துவமான தீர்மானத்தை பின்தொடர்வதில் இருந்து உலகம் பின்வாங்கக் கூடாது என்பதை நினைவூட்டுவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
இந்த இக்கட்டான தருணத்தில் ஒருமித்த தீர்மானத்தை எட்டுவதற்கு சர்வதேச சமூகம் பிளவுகளை ஒதுக்கிவிட்டு, பகைமை மேலும் அதிகரிப்பதைத் தடுப்பதற்காக ஒன்றிணைந்த குரலில் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இந்த சவாலான காலகட்டத்திலும், 1967 ஆம் ஆண்டின் எல்லைகளை அடிப்படையாகக் கொண்ட,இரு நாடுகளின் தீர்வு உட்பட, தொடர்புடைய ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களுக்கு இணங்க, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு இலங்கை தனது உறுதியான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறது என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் செய்தி
பலஸ்தீனத்துடனான ஒற்றுமைக்கான இலங்கைக் குழு, கடந்த வெள்ளிக்கிழமை லக்ச்மன் கதிர்காமர் நிறுவனத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின்போதே ஜனாதிபதியின் செய்தி வாசிக்கப்பட்டது.
அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது வரவேற்பு உரையில், ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் சியோனிச விரிவாக்கக் கொள்கைகளைக் கண்டித்தார்.
இந்தநிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிரான்சே மற்றும் பலஸ்தீன பொறுப்பதிகாரி ஹிசாம் அபுதாஹா ஆகியோர் உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.