யாழ் போதனாவில் மகப்பேற்று விடுதித் தொகுதி நிறுவ சுவிட்சர்லாந்து நாட்டிடம் நிதி உதவி கோரிக்கை
யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி ஸ்ரீ பவானந்தராஜாவுடன் சுவிட்சர்லாந்து நாட்டின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான தூதுவராலய குடிபெயர்வுக்கான முதனிலை செயலாளர் டொரிஸ் மொனொர் தலைமையிலான பிரமுகர்கள் நேற்றைய தினம் சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
அக் கலந்துரையாடலில் தூதுவராலய பிரமுகர்கள் இலங்கையில் அனைத்து சமூகங்களினையும் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றமொன்றினைக் கொண்டுவந்தமையையிட்டு தங்கள் மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியதுடன் ஜனாதிபதியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களினை நடைமுறைப்படுத்துவதற்கான தங்களின் முழுமையான ஆதரவினையும் வெளிப்படுத்தினர்.
அத்துடன் யாழ் – கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்தி தொடர்பிலும் அதற்கு தாங்கள் எந்த வகையில் உதவமுடியும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினருடன் விரிவாகக் கலந்துரையாடினர்.
மேலும் வைத்தியகலாநிதி ஸ்ரீ பவானந்தராஜா , யாழ் போதனா வைத்தியசாலையில் சகல வசதிகளுடன் கூடிய மகப்பேற்று விடுதித் தொகுதியொன்றினை நிறுவுவதற்கான சுவிட்சர்லாந்து நாட்டின் நிதி அனுசரணையையும் சுவிட்சர்லாந்து நாட்டின் பிரமுகர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.
அத்துடன் சமகால அரசியல் நிலைமை தொடர்பிலும் தூதுவராலய பிரமுகர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்து கொண்டனர்.