சம்பந்தியை பிரான்சுக்கான தூதராக்க திட்டமிடும் டொனால்டு ட்ரம்ப்: அவரின் மோசமான பின்னணி
அமெரிக்க ஜனாதிபதி பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்டு ட்ரம்ப் தனது அரசாங்கத்தில் மற்றொரு சர்ச்சைக்குரிய சேர்க்கையை முன்னெடுக்க உள்ளார்.
ஜாரெட் குஷ்னரின் தந்தை
அமெரிக்காவில் வரி ஏய்ப்பாளர் என குற்றம் சாட்டப்பட்ட சார்லஸ் குஷ்னர் என்பவரை பிரான்சுக்கான தூதராக நியமிக்க ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். தனது முடிவை சமூக ஊடகத்தில் ட்ரம்ப் பதிவு செய்துள்ளார்.
இதனால், சார்லஸ் குஷ்னர் தொடர்பில் வெளியான தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சார்லஸ் குஷ்னர் தொடர்பில், மிகப்பெரிய வணிகத் தலைவர், நன்கொடையாளர் மற்றும் ஒப்பந்தங்களை முன்னெடுப்பவர் என புகழ்ந்துள்ளார்.
டொனால்டு ட்ரம்பின் மருமகனான ஜாரெட் குஷ்னரின் தந்தை தான் கட்டுமான நிறுவன உரிமையாளரான இந்த சார்லஸ் குஷ்னர். டொனால்டு ட்ரம்பின் ஆலோசகராக முன்னர் செயல்பட்டவர் ஜாரெட் குஷ்னர்.
இரண்டு ஆண்டுகள் சிறை
ட்ரம்பின் மூத்த மகளான இவான்காவை ஜாரெட் குஷ்னர் திருமணம் செய்துள்ளார். வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனைகள் மற்றும் நன்கொடைகள் செய்ததற்காக குற்றவாளி என அறிவிக்கப்பட்ட சார்லஸ் குஷ்னருக்கு கடந்த 2020ல் ஜனாதிபதியான டொனால்டு ட்ரம்ப் மன்னிப்பு வழங்கினார்.
18 பிரிவுகளில் குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட குஷ்னருக்கு 2005ல் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ட்ரம்பும் குஷ்னரும் தொழில் ரீதியாக நன்கு அறிமுகமானவர்கள்.
மட்டுமின்றி அந்த நட்பை உறுதி செய்யும் பொருட்டு 2009ல் தங்களின் பிள்ளைகளின் திருமணத்தை முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.