பிரான்ஸ் எல்லையில் பாறையில் மோதி விபத்துக்குள்ளான சுற்றுலாப்பேருந்து: மூன்று பேர் பலி
பிரான்ஸ் எல்லையில் சுற்றுலாப்பேருந்து ஒன்று பாறை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பேர் வரை பலியாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
பாறையில் மோதி விபத்துக்குள்ளான சுற்றுலாப்பேருந்து
பார்சிலோனாவிலிருந்து அந்தோரா என்னும் இடம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த சுற்றுலாப்பேருந்து ஒன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம், பிரான்சுக்கு தென்மேற்கே உள்ள சாலை ஒன்றின் ஓரமாக அமைந்துள்ள பாறையில் வேகமாகச் சென்று மோதியுள்ளது.
Porté-Puymorens என்னுமிடத்திலுள்ள பனிச்சறுக்கு ரிசார்ட் ஒன்றின் அருகே நிகழ்ந்த இந்த விபத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளார்கள், எட்டு பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.
ஒரு நான்கு வயது சிறுவன் உட்பட, படுகாயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
அந்தப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சுமார் ஒன்றரை கிலோமீற்றர் தூரத்துக்கு அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்பட்டதை, அந்தப் பேருந்தின் பின்னால் வந்த மற்ற வாகனங்களின் சாரதிகள் கவனித்துள்ளார்கள்.
பிரான்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சரான François Durovray, உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், Porté-Puymorens பகுதி மேயரான Jean-Philippe Augé, விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.