சம்பல் வன்முறை: மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!
உத்தரப் பிரதேசத்தின் சம்பலில் சமீபத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் செவ்வாய்க்கிழமை அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் முதல் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் 16 மசோதாக்களைத் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், அதானி விவகாரத்தை மத்திய அரசுக்கு எதிராக கையில் எடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் இன்று அவை கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியதும், சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) தலைவர் அகிலேஷ் யாதவ் கனமழை, வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்கள் தொடர்பான பிரச்னையை தனது இருக்கையிலிருந்து எழுந்து கேள்வி எழுப்பினார். இதுகுறித்துப் பேச அவை தலைவரிடம் அனுமதி கோரினார்.
பூஜ்ஜிய நேரத்தில் உறுப்பினர்கள் பிரச்னையை எழுப்பலாம் என அவைத்தலைவர் கூறியதால், யாதவ் மற்றும் அவரது கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதற்கிடையில், சமாஜ்வாதி உறுப்பினர்கள், கோஷங்களை எழுப்பினர்.
சமாஜ்வாதி உறுப்பினர்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த போது, திமுக உறுப்பினர் ஏ. ராஜா, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை இருக்கையிலிருந்து எழுந்து சமாஜ்வாதி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினார்.
சமாஜ்வாதி கட்சி எம்பிக்களுக்கு ஆதரவாக என்சிபி மற்றும் சிவசேனா உறுப்பினர்கள், காங்கிரஸ் உறுப்பினர்களும், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநடப்பு செய்தனர்.
மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மற்றும் இந்திய கூட்டணி தலைவர்கள் அதானி குற்றப்பத்திரிகை விவகாரம் தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.