மீண்டும் அதிகரித்துள்ள அரிசி விலை
அரிசியின் மொத்த விலையை மீண்டும் உயர்த்தியுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள அரிசி மொத்த வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
நாட்டு அரிசி, சம்பா மற்றும் கீரி சம்பா ஆகிய அரிசிகளின் மொத்த விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டு அரிசியின் மொத்த விலை 255 ரூபாயாகவும், சம்பா அரிசி 260 ரூபாயாகவும், கீரி சம்பா 275 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு
மேலும், அரிசியின் அளவுக்கான விலைக் கட்டணத்தை வங்கியில் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, சந்தையில் நாட்டு அரிசியின் கட்டுப்பாட்டு விலை ரூ.220, சம்பா ரூ.230, கீரி சம்பா ரூ.260, என்றவாறு விற்பனை செய்ய நுகர்வோர் சேவை அதிகாரசபை சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தது.
அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியின் விலையை அவ்வப்போது அதிகரிப்பதால் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை விற்க முடியாமல் தவிப்பதாக அரிசி மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் அரிசி ஆலை உரிமையாளர்கள் நாட்டு அரிசியை ரூ.235-240, சம்பா ரூ.250, கீரி சம்பா ரூ.260-265 என மொத்த விலையில் வியாபாரிகளுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.