டொனால்டு ட்ரம்புக்கு மீண்டும் பிரித்தானிய அரச குடும்பம் சார்பில் விருந்தளிக்கப்படாது
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் மீண்டும் பொறுப்புக்கு வரும் நிலையில், பிரித்தானிய அரச குடும்பம் மற்றும் அரசாங்கம் முன்னெடுக்கும் விருந்தை அவர் தவறவிடுவார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அரசியல் ஆதாயம் தேடும்
டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக எதிர்வரும் ஜனவரி மாதம் பொறுபேற்க இருக்கிறார். பிரித்தானிய அரச குடும்பத்துடன் நெருக்கமான நட்புறைவை உருவாக்க டொனால்டு ட்ரம்ப் ஆசைப்பட்டும் வந்துள்ளார்.
இதனால், அப்படியான ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் திட்டத்தை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வகுத்து வந்தார். ஆனால், அமெரிக்க ஜனாதிபதி ஒருவருக்கு இரண்டு முறை அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் வாய்பளிக்கப்படுவதில்லை என்று அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மாறாக ட்ரம்பை சிறப்பு விருந்தினராக அழைக்கலாம் என்றும் யோசனை தெரிவித்துள்ளனர். அதில் மன்னரையும் சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முறை இருக்காது
ஆனால் 2019ல் ட்ரம்புக்கு கிடைத்த மாலைகளும் மரியாதைகளும் இந்த முறை இருக்காது என்றே கூறப்படுகிறது. கடந்த முறை ஆடம்பரமான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், 150 சிறப்பு விருந்தினர்களுடன் பக்கிங்ஹாம் அரண்மனையில் விருந்தும் அளிக்கப்பட்டது.
2018ல் பிரித்தானியா வந்தபோது அவர் எலிசபெத் ராணியாரை மட்டுமே சந்தித்துள்ளார். விருந்தேதும் அளிக்கப்படவில்லை. அடுத்தமுறை வரும் போதும் மன்னரை மட்டுமே சந்திக்கும் வாய்ப்பு அளிக்கப்படும் என கூறுகின்றனர்.
ஜனவரி 20ம் திகதி டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பொறுப்புக்கு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.