தமிழக அமைச்சர் மீது சேற்றை வீசிய மக்கள்.., வெள்ள பாதிப்பு குறித்து கேட்க சென்றபோது பரபரப்பு
வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிய ஆய்வுக்கு சென்ற தமிழக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் மீது சேறு வீச்சு
ஃபெங்கல் புயல் காரணாமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தற்போது, புயல் கரையை கடந்து இரண்டு நாட்கள் ஆகியும் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீர் வடியவில்லை. இதனால், அங்குள்ள மக்கள் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
ஆங்காங்கே, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இருவேல்பட்டு பகுதியில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக அமைச்சர் பொன்முடி சென்றிருந்தார்.
அப்போது, அவர் மீது மக்கள் சேற்றை வீசிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் சாலைமறியலில் மக்கள் ஈடுபட்டனர்.
அவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் சென்றபோது சேறு வீசப்பட்டது. மேலும், அவருடன் ஆய்வுக்கு சென்ற கௌதம சிகாமணி, ஆட்சியர் உள்ளிட்டோர் மீதும் சேறு வீசப்பட்டது.
இதனால், அவர்கள் அங்கிருந்து பாதியில் கிளம்பியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.