யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் டெங்குத் தொற்று தீவிரம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய் மற்றும் உரும்பிராய் பகுதிகளில் டெங்குத் தொற்று தீவிரம் பெற்றுள்ளதாக யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதார
சேவைகள் பணிப்பாளர் மருத்துவக் கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக டெங்குத் தொற்று தீவிரமாகி வருகின்றது. இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 5 ஆயிரத்து 453 பேர் டெங்குத் தொற்றுக்கு உட்பட்டுள்ளனர். செப்ரெம்பர் மாதம் 42 பேரும், ஒக்ரோபர் மாதம் 69 பேரும், நவம்பர் மாதம் 134 பேரும் டெங்குத் தொற்றுடன் அவதானிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில்
பார்க்கும்போது நாளுக்குநாள் டெங்குத் தொற்று மிகவும் ஆபத்தானதாக மாறி வருகின்றமை தெளிவாகின்றது.
யாழ்ப்பாணம், கோப்பாய், கரவெட்டி, பருத்தித்துறை, சண்டிலிப்பாய், சங்கானை, சாவகச்சேரி ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளிலும் டெங்குத் தொற்று பரவி வருகின்றது.
குறிப்பாக, யாழ்ப்பாணம் மாநகரசபையின் எல்லைக்குட்பட்ட கொழும்புத்துறையிலும், கோப்பாய் சுகாதாரமருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட்ட உரும்பிராயிலும் டெங்குத் தொற்று மிக வேகமாகியுள்ளது என்றார்.